“தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்” - முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

Vijayakanth's 2nd Death Anniversary

விஜயகாந்துடன் - ஸ்டாலின் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: “தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற விஜயகாந்தின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவுநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கப் பதிவில் பகிர்ந்த ட்வீட்டில், “ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிச.28-ம் தேதி தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்படுகிறது.

இந்நிலையில், விஜயகாந்தின் இரண்டாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அரசியல் தலைவர்கள் அவரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை முதலே சென்னை கோயம்பேட்டில் அவரது நினைவிடத்துக்கு தேமுதிகவினர் ஏராளமானோர் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in