சென்னை: தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 11 நிறுவனங்களிடம் இருந்தும், பீர் வகைகள் 7 நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இதனிடையே கடந்த ஆட்சிக் காலங்களில் சில குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே அதிகளவில் மதுபானம் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சமமான அளவில் மதுபானம் கொள்முதல் செய்யப்படும் என்றும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளிலும் அனைத்து நிறுவனங்களின் மதுபானங்களும் சம அளவில் விற்கப்படும்
எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் செப்.1-ம் தேதி முதல் அனைத்து கடைகளிலும் மதுபான தேவைபட்டியலை ஆன்லைன் செயலி மூலம் அனுப்பும் நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கவுள்ளது.
இது குறித்து அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் கையடக்க கருவி வாயிலாக அந்த கடைக்கான தேவைப்பட்டியலை ஆன்லைன் முறையில் பெறும் நடைமுறை தொடங்கப்படவுள்ளது.
இந்த ஆன்லைன் முறையில் அனைத்து வகை மற்றும் பிராண்டுகளின் மதுபானங்கள் தானாகவே சம அளவில் தேவை பட்டியலில் இருக்கும். கடையின் மேற்பார்வையாளர் அதை பார்த்து தேவை இருக்கும் பட்சத்தில் கூடுதலாக பட்டியலில் சேர்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட பிராண்ட் மற்றும் மதுவகையை கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கலாம். ஆனால் தேவை பட்டியலில் இருந்து எதையும் நீக்க முடியாது.
தேவை பட்டியலை சமர்ப்பிக்க கடையின் அதிகாரப்பூர்வ செல்போன் எண்ணை பதிவிட்டு அதில் வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
கடை மேற்பார்வையாளர் சமர்ப்பிக்கும் தேவைப்பட்டியலே இறுதியானதாக கருதப்படும். முன்னதாக இந்த தேவைப்பட்டியலை நேரடியாக கடை மேலாளர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தற்போது இந்த ஆன்லைன் நடைமுறையால் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறைகள் குறித்து அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் அறிந்திருப்பதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.