சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 2026 ஜன.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2003-க்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது. 2003 ஏப்.1-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை மாற்றிவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (சிபிஎஸ்), ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) ஆகிய 3 திட்டங்களையும் விரிவாக ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை அளிக்க ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சமீபத்தில் பரிந்துரைகளை வழங்கியது.
அதை ஆய்வு செய்து, ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS - டேப்ஸ்) என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 3-ம் தேதி அறிவித்தார்.
ஆனால், இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சில குறைகள் இருப்பதால் இதை ஏற்க முடியாது என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு புதிதாக அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை 2026 ஜன.1-ம் தேதி முதல் அமல்படுத்துவதாக அறிவித்து, தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
>> டேப்ஸ் திட்டத்தின்கீழ் வரும் தகுதியான அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி இணைந்த மாத ஊதியத்தில் 50 சதவீதத்துக்கு சமமான உறுதிப்படுத்தப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக அரசு ஊழியர்கள் தங்கள் மாத ஊதியத்தில் 10 சதவீதத்தை பங்களிப்பார்கள்.
கூடுதல் நிதியை அரசு ஏற்கும்: உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான முழு கூடுதல் நிதியையும் தமிழக அரசே ஏற்கும்.
>> ஓய்வூதியர் உயிரிழந்தால், அவர் கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதத்துக்கு சமமான மாத குடும்ப ஓய்வூதியம் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
>> உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வுக்கு தகுதி உடையவர்கள்.
ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை: ஓய்வு பெற்றாலோ, பணியில் இருக்கும்போது உயிரிழந்தாலோ தகுதிவாய்ந்த சேவைக் காலத்துக்கு ஏற்ப அதிபட்சமாக ரூ.25 லட்சத்துக்கு உட்பட்டு பணிக்கொடை வழங்கப்படும்.
>> சிபிஎஸ் திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்து, டேப்ஸ் செயல்படுத்தப்படுவதற்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அவர்களது சேவைக் காலத்துக்கு ஏற்ப சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
>> 2026 ஜன.1 முதல் பணியில் சேரும் தகுதியுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் டேப்ஸ் திட்டம் கட்டாயமாகும். சிபிஎஸ் கீழ் உள்ள மற்றும் 2026 ஜன.1-ம் தேதி அல்லது அதற்கு பிறகு ஓய்வு பெறும் அனைத்து தகுதியான அரசு ஊழியர்களும் அறிவிக்கப்பட உள்ள விதிகளுக்கு உட்பட்டு, டேப்ஸ் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.
>> 2026 ஜன.1-ம் தேதிக்கு முன்பு பணியில் இருந்த மற்றும் சிபிஎஸ் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் ஓய்வு பெறும்போது, அறிவிக்கப்படும் விதிகளின்படி டேப்ஸ் திட்டத்தின்கீழ் உள்ள பலன்கள் அல்லது சிபிஎஸ் திட்டத்தின்கீழ் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களுக்கு இணையான ஒன்றை தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
>> டேப்ஸ் திட்டத்தின்கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் ஆரம்பத்தில் சிபிஎஸ் கீழ் பணியில் சேர்ந்து, பிறகு டேப்ஸ் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு ஓய்வு பெறும்போது, டேப்ஸ் பலன்களை தேர்வு செய்தவர்கள் உட்பட, பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தை பெற தகுதியானவர்கள்.
>> அதேபோல, டேப்ஸ் திட்டத்தின்கீழ் வரும் அனைத்து அரசு ஊழியர்களும், ஆரம்பத்தில் சிபிஎஸ் கீழ் பணியில் சேர்ந்து பிறகு, டேப்ஸ் திட்டத்தில் கொண்டுவரப்பட்டு, ஓய்வடையும் காலத்தில் டேப்ஸ் பலன்களை தேர்வு செய்யும்போது, நிபந்தனைகளுக்கு உட்பட்டு தங்கள் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை மாற்றிப் பெறுவதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.
>> டேப்ஸ் திட்டத்துக்கான விரிவான விதிகள், தகுதி நிபந்தனைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், செயல்படுத்தும் நடைமுறைகள் ஆகியவை அரசால் தனித்தனியாக அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 2026 ஜன.1 முதல் நடைமுறைக்கு வருகிறது. விதிகள் அறிவிக்கப்பட்டு, தேவையான சட்டப்பூர்வ, கணக்கியல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு இது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.