புதுச்சேரி: மத்தியில் நீண்ட காலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால் புதுச்சேரியிலும் அக்கட்சியே ஆட்சியை பிடித்தது. இந்த நிலை 2011-ம் ஆண்டில் மாறியது. காங்கிரஸில் இருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸை தொடங்கினார் ரங்கசாமி. அது முதல் புதுச்சேரிக்கான சொந்த மண்ணில் உருவான ஒரு கட்சியின் செல்வாக்கு உயர்ந்தது.
அப்போது என்.ஆர்.காங்கிரஸை தொடங்கிய ரங்கசாமி, அதிமுகவுடன்கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, அதன்பின் தனித்து ஆட்சி அமைத்தார். கட்சி தொடங்கி ஒன்றரை மாதத்தில் அவர் ஆட்சியைப் பிடித்தது பலரின்புருவத்தை உயர்த்தியது. கடந்த 2016 தேர்தலில் கூட்டணி இன்றி தனித்து நின்ற போது ரங்கசாமியால் 8 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தையே பெற முடிந்தது.
கடந்த 2021-ல் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ரங்கசாமி மீண்டும் ஆட்சியை பிடித்தார். அந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் பலரும் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்குத் தாவியதால் பெரும் பின்னடைவை காங்கிரஸ் சந்தித்தது. அப்போது காங்கிரஸ் 2 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்றது. இதிலிருந்து மீள வேண்டும் என்று காங்கிரஸும், ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸும் தற்போதைய தேர்தல் களத்தில் தீவிரமாக மோதுகின்றன. கூடவே தங்களை மென்மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
என்ஆர்.காங்கிரஸுடன் அதன் பழைய கூட்டாளிகளான பாஜக, அதிமுக இணைந்துள்ளது. புதிதாக லட்சிய ஜனநாயக கட்சியும் கைகோர்த்துள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக, லஜக முறையே இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. “2029 வரை மத்தியில் பாஜக ஆட்சிதான் நீடிக்கும்.
இந்தச் சூழலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சியில் இருப்பதே வளர்ச்சிக்கு வழி வகுக்கும்” என்று ரங்கசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுகவும், லட்சிய ஜனநாயக் கட்சியும் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில் இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடே பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் முடிந்து ஒருவித அதிருப்தியுடனே களத்தில் இறங்கியிருக்கின்றனர்.
மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. 13 தொகுதிகளில் திமுக, ஒரு தொகுதியில் விசிக போட்டியிடுகிறது. இக்கூட்டணிக்காக தொடக்கத்தில் உரத்து குரல் கொடுத்து வந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
கூட்டணியில் ஒப்பந்தம் செய்து கொண்டபடி பிரதான கட்சிகளான காங்கிரஸ் நடந்து கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் - திமுக இடையே மோதல் ஏற்பட்டு, தங்களுக்கான 16 தொகுதிகளைத் தாண்டி திமுக போட்டியிடும் 5 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் கை சின்னத்துடன் களத்தில் உள்ளனர்.
ஒரே தொகுதிக்குள் ஒரு பக்கம் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்பதும், மறுபுறம் கை சின்னத்துக்கு வாக்கு கேட்பதும் என்று இண்டியா கூட்டணிக் கட்சியினர் புதுவை மக்களை திகைப்பில் ஆழ்த்தி வருகின்றனர். விசிக போட்டியிடும் ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் போட்டி வேட்பாளர் வலம் வந்து வாக்கு சேகரிக்கிறார். இண்டியா கூட்டணியின் இந்த சிதறல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
கடந்த இரு நாட்களுக்கு முன் புதுச்சேரிக்கு வந்த காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மட்டும் சமாதானப்படுத்தி, அவர்கள் கூடுதலாக போட்டியிட்ட 3 தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவு தருமாறு கூறியிருக்கிறார். அதன்படி அக்கட்சியினர், தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள உழவர்கரை தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மற்ற 3 தொகுதிகளில் காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை நிறுத்தி விட்டனர்.
இதனிடையே புதுவையில் தவெகவும், நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவர்களுடன் கூட்டணியில் உள்ள நேயம் மக்கள் கழகம் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இவர்களுக்கான தனித்த வாக்குகளும் உள்ளன. தமிழகத்தைப் போல புதுவையிலும் தவெகவுக்கு இளம் வாக்காளர்களின் செல்வாக்கு உள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவையில் 20 ஓட்டு வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற சரித்திர நிகழ்வெல்லாம் அரங்கேறியிருக்கிறது. சிறிய அளவிலான வாக்குகள் வெற்றி தோல்வியை மாற்றி விடும். அந்தச் சூழலில் தவெக, நாதக வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதை கணக்கில் வைத்தே தவெகவில் தற்போதைய எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், தொகுதி பிரபலங்கள் சீட் பெற்று போட்டியிடுகின்றனர். அவர்களும் அந்த தொகுதியில் வெற்றி பெற தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிடும் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் அதிக கவனம் செலுத்துகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கமும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் பிற தொகுதிகளின் பிரச்சாரத்துக்கு சென்றாலும், தங்கள் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், திமுக மாநில அமைப்பாளர் சிவா ஆகியோரும் தங்கள் தொகுதிகளுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். மொத்தத்தில் முக்கியத் தலைவர்கள் தங்கள் தொகுதிகளிலேயே முடங்கிப் போயிருக்கின்றனர். இதனால் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது.