சென்னை: கல்வியியல் கல்லூரிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஒப்புதல் அளிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எம்.கண்மணி, கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் கல்வித் தகுதி ஒப்புதல் பெறும் ஆசிரியர்கள் (உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள்) தங்கள் அசல் சான்றிதழ்களைச் சரிபார்ப்பு செய்யும் நாட்களில் பல்கலைக்கழகத்துக்குக் கண்டிப்பாக நேரில் வந்து பதிவாளரிடம் அசல் சான்றிதழ்களைக் காண்பித்த பின்னரே அச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்யப்படும்.
ஒப்புதல் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுடன் கல்லூரி நிர்வாகம் உறுதிமொழி படிவத்தை ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பத்தில் கல்வித் தகுதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றிதழ் (Genuineness Certificate) அல்லது உண்மைத்தன்மை சான்றிதழுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் வரைவோலை ரசீது நகலை இணைக்க வேண்டும்.