கோப்புப் படம்
சென்னை: விபி ஜிராம் ஜி திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய நடைமுறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் அமுதவல்லி மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை விவரம்: முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் விபி ஜிராம்ஜி திட்டத்திலும் தொடர்கிறது. சிறப்பு பணிகள் பொறுத்தவரை, அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல், ஆழப்படுத்தப்படும் இடங்களில் தண்ணீர் தெளித்தல், தொழிலாளர்கள் குழந்தைகளை பராமரித்தல், மண்வெட்டி, கடப்பாறை போன்ற வற்றை கொண்டு கரைகளில் கொட்டப்படும் மண்களை சமப்படுத்துதல், கரைகளை சமப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் அடங்கும். அதேபோல், உடல் உழைப்பை மேற்கொள்ளக்கூடிய மாற்றுத்திறனாளிகள் முட்புதர்கள் அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், மண்மூடுதல், நீர்பாய்ச்சுதல், மண்வரப்பு மற்றும் கல்வரப்பு அமைத்தல், அகழி தோண்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
பணித்தளத்தில் மாற்றுத் திறனாளிகள் குறைவாக இருந்தால், அவர்களுக்காக வரையறுக்கப்பட்ட சிறப்புப் பணிகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் இருந்தால், 5 அல்லது 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, சாதாரண தொழிலாளர்களின் பணி அளவில் 50 சதவீதம் மட்டுமே ஒதுக்க வேண்டும். அந்த மண் தொடர்பான பணிகளை தினமும் 4 மணி நேரம் செய்தாலே போதுமானது.
இதில் முன் அளவீடு செய்யப்பட்ட 50 சதவீத பணியை நிறைவு செய்தால், மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும். வேலை கோரும் தகுதியுள்ள அனைவருக்கும் 15 நாட்களுக்குள் தனித்துவமான வேலை அட்டை வழங்க வேண்டும்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்காக தனி மின்னணு வருகைப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். பணி அளவீடு, இறுதி அளவீடு மற்றும் முழு ஊதியம் வழங்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வட்டார அளவிலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட அளவிலும் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
இந்த புதிய நடைமுறைகள் அனைத்தையும் ஊராட்சி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து, புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை எவ்வித தொய்வுமின்றி முழுமையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.