சென்னை: தமிழக காங்கிரஸில் மொத்தம் உள்ள 77 மாவட்ட தலைவர்கள் பதவிகளில் 71 மாவட்டங்களுக்கான தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் நேற்று முன்தினம் அறிவித்தது. இதில் முதன்முறையாக 4 பெண் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக காங்கிரஸில் புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்தது. அதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 38 பேரை மாவட்ட பார்வையாளர்களாக நியமித்து தலா 2 பேரை பரிந்துரைக்க அறிவுறுத்தி இருந்தது. அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டு பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, தலா 2 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர்.
தனைத் தொடர்ந்து, தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க டெல்லி சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, 71 மாவட்ட தலைவர்கள் பட்டியலை இறுதிசெய்து, நேற்று முன்தினம் கே.சி.வேணுகோபால் வெளியிட்டார்.
ரூ.15 லட்சம் பேரம்: ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் 3 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரிக்கு 3 மாவட்ட தலைவர்கள் பதவிக்கு பெயர்களை பரிந்துரைக்க ரூ.15 லட்சம் பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அந்த பதவிகளுக்கான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 71 பேரில், ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டார் தெரிவிக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸில் முதன் முறையாக 4 பெண் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வடசென்னை மேற்கு, திருச்சி மாநகரம், திண்டுக்கல், வேலூர் மத்தியம், தூத்துக்குடி தெற்கு, செங்கல்பட்டு, சிவகங்கை, திருப்பூர் தெற்கு ஆகிய 8 மாவட்ட தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ்தளத்தில், மாவட்ட தலைவர்கள் எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.