தமிழகம்

தமிழ்நாடு மின்வாரியத்தின் டெண்டர்களை ஆராய 3 புதிய குழுக்கள் அமைப்பு: அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு மின்​வாரி​யத்​தின் டெண்​டர் சார்ந்த விவரங்​களை ஆராய 3 புதிய குழுக்​களை அமைத்து அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

கடந்த திங்​கட்​கிழமை சென்​னை​யில் ஒப்​பந்​த​தா​ரர்​கள் மற்​றும் விநி​யோகஸ்​தர்​களு​ட​னான கலந்​தாய்​வுக் கூட்​டம் நடந்​தது. இதில் பேசிய அமைச்​சர் நிர்​மல் குமார், கடந்த கால டெண்​டர் முறை​கள் குறித்து மறு ஆய்வு செய்​யப்​பட்டு வரு​வ​தாக​வும், தகு​தி​யுள்ள நிறு​வனங்​களுக்கு மட்​டுமே வெளிப்​படை​யான முறை​யில் டெண்​டர்​கள் கிடைப்​பது உறுதி செய்​யப்​படும் என்​றும் தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், தமிழ்​நாடு மின்​சார வாரி​யத்​தின் கொள்​முதல் மற்​றும் ஒப்​பந்த நடை​முறை​களில் முழு​மை​யான வெளிப்​படைத்​தன்​மையை உறுதி செய்​வதற்​காக, டெண்​டர் விவரங்​களை ஆராய சந்தை பகுப்​பாய்வு குழு, உற்​பத்​தி​யாளர் மதிப்​பீட்டு குழு மற்​றும் குறுக்கு சரி​பார்ப்பு குழு என 3 புதிய குழுக்​கள் அமைக்க எரிசக்தி மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சர் சி.டி.ஆர். நிர்​மல் குமார் உத்​தரவை பிறப்​பித்​துள்​ளார்.

டிஜிட்​டல் டெண்​டர்: அதன்​படி, மின்​துறை​யின் எந்​தவொரு பிரி​விலும் புதிய டெண்​டர் அறி​விப்​பு​களை வெளி​யிடு​வதற்கு முன்​பாக, இந்த குழுக்​களின் விரி​வான ஆய்​வு​களுக்கு உட்​படுத்தி முன் அனு​மதி பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. மின்​சார வாரி​யத்​தின் நிர்​வாக சீர்​திருத்​தங்​களின் ஒரு பகு​தி​யாக, விரை​வில் டிஜிட்​டல் போர்​டல் சார்ந்த டெண்​டர் முறை அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளது.

இதன்​மூலம் மனித தலை​யீடு​கள் குறைக்​கப்​பட்​டு, ஒட்​டுமொத்த டெண்​டர் செயல்​முறை​யும் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்டு பொது​வெளி​யில் வெளிப்​படை​யாக கண்​காணிக்​கப்​படும். தற்​போது கடும் நிதி நெருக்​கடி​யில் இருக்​கும் மின்​சார வாரி​யத்தை மீட்​டெடுக்​க​வும், முறையற்ற கூடு​தல் விலை நிர்​ண​யங்​களை தவிர்க்​க​வும் இக்​குழுக்​களின் கண்​காணிப்பு மிக​வும் அவசி​ய​மானது என மின் வாரிய வட்​டாரங்​கள்​ தெரிவிக்​கின்​றன.

SCROLL FOR NEXT