தமிழகம்

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்: துணை முதல்வர் திறந்துவைப்பு!

வெற்றி மயிலோன்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 73,135 ஆகும்.

தற்போதைய பழைய பேருந்து நிலையம் 27 பேருந்து நிறுத்தங்களுடன் கூடிய "பி" கிளாஸ் பேருந்து நிலையமாக பட்டுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்தது.

அதிகமான பேருந்துகள் நகர் பகுதியில் வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதை போக்கிடும் வகையில் முதல்வரின் உத்தரவின்படி பட்டுக்கோட்டை நகராட்சி நரியம்பாளையம் பகுதியில் 20கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.50 ஏக்கர் பரப்பளவில் மேம்படுத்தப்பட்ட ஏ வகுப்பு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

          

இந்த புதிய பேருந்து நிலையத்தில் 50 பேருந்துகளை நிறுத்தும் வசதி, 120 கடைகள், 2 உணவகங்கள், குடிநீர் வசதி, 2 இடங்களில் இரு சக்கர வாகன நிறுத்தும் வசதி, ஒரு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, முன்பதிவு அறை, 3 பயணிகள் காத்திருப்பு அறைகள் மற்றும் 4 இடங்களில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை: இன்று பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தை உங்கள் முன்னிலையில் திறந்து வைப்பதில் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பட்டுக்கோட்டை நகராட்சி மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு நகராட்சி. இன்னும் சொல்லப்போனால், மிக வேகமாக வளர்ந்து வருகின்ற நகராட்சியாக இந்தப் பட்டுக்கோட்டை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கின்ற வகையில் ஒரு பேருந்து நிலையம் இருந்ததா என்று கேட்டால் இல்லை. பேருந்துகள் நிறுத்தும் இடம் மிக நெருக்கடியான இடமாக இருந்தது.

நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, பட்டுக்கோட்டையின் வளர்ச்சிக்காக இன்று பல்வேறு திட்டங்களைச் செய்து வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம்தான் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்தப் பேருந்து நிலையம். பட்டுக்கோட்டையின் எதிர்கால வளர்ச்சியை மனதில்கொண்டு இந்தப் பேருந்து நிலையத்தைத் தாராளமான இடவசதியோடு, அதிநவீனமான கட்டுப்பாட்டு வசதிகளோடு கட்டியிருக்கிறோம்.

திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை எல்லா ஊருக்கும் எல்லாம் என்று அனைத்து ஊர்களிலும் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இந்த நகராட்சி முழுவதும் சுமார் 35 கிலோ மீட்டர் நீளத்திற்குத் தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நகராட்சியில் உள்ள குளங்கள் 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய சந்தை, புதிய பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

5.00 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், 22.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகளுக்குப் புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் எல்லாம் கட்டப்பட்டுள்ளன.

1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் கொண்டிருக்கக்கூடிய புதிய அறிவுசார் மையம் என இந்தப் பட்டுக்கோட்டை நகராட்சியின் வளர்ச்சிக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு இன்று பல்வேறு பணிகளைச் செய்துள்ளது.

இந்த மாதிரியான உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஒரு புறமும், மறுபுறம் பொதுமக்களுடைய நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நம்முடைய முதல்வர் செய்து வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நம்முடைய முதல்வர் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டக் கையெழுத்து. தஞ்சை மாவட்டத்தில் இன்று இந்த விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக 30 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறீர்கள்.

பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 60,000 குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்.

அதே போல் கல்லூரி மாணவி, மாணவர்களுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 32,000 மாணவ, மாணவிகள் பயன் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் சமீபத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி அதைச் செயல்படுத்தி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 35,000 மாணவர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மடிக்கணினி வசதி திட்டத்தைக் கொடுத்திருக்கிறார்.

இவை அனைத்தையும் விட மிக மிக முக்கியமான ஒரு திட்டம், இங்கே இவ்வளவு மகளிர் வந்திருக்கிறீர்கள், உங்களுடைய ஒவ்வொருவருடைய முகத்திலும் மகிழ்ச்சி தெரிகிறது. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திட்டம், அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்.

ஆட்சிப் பொறுப்பேற்கும்போது நம்முடைய தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்தோம். 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நம்முடைய முதலமைச்சர் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு அந்தத் திட்டத்தை முதல்வர் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இந்த மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுக்குச் சேர்த்து 3,000 ரூபாய், அதோடு சேர்த்து கோடைக்கால சிறப்புத் திட்டம் என 2,000 ரூபாய் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாயை இன்று நம்முடைய முதல்வர் மகளிருக்குக் கொடுத்திருக்கிறார்.

இன்று இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப் பலர் திட்டமிட்டார்கள். இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் நம்முடைய முதல்வர் தகர்த்தெறிந்து இன்று 5,000 ரூபாயை மகளிருக்கு கொடுத்திருக்கிறார்.

இப்படி மக்கள் நலத் திட்டங்களாக இருந்தாலும் சரி, பேருந்து நிலையம் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும் சரி, நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இன்று புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தைப் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

மிக முக்கியமாக இந்த பேருந்து நிலையத்தை சுகாதாரமாக, தூய்மையாகப் பராமரிக்க நகராட்சிக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இனி இந்த மாதிரியான வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும், தமிழ்நாடு மேன்மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT