சென்னை: தமிழக சிறைத் துறையில் நிர்வாக செயல்பாடுகளை மேலும் வெளிப்படையானதாகவும், ஒழுங்குமுறையுடனும் மாற்றும் நோக்கில், புதிய இடமாற்ற வாரியத்தை, சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அமைத்துள்ளார்.
அரசு துறைகளில் பணியிட மாற்ற நடைமுறைகளை மையப்படுத்தி வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், சிறைத் துறையிலும் தற்போது நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, சிறைத் துறை பணியாளர்களின் பணியிட மாற்றம் மற்றும் புதிய பணி நியமனங்களை வெளிப்படையாகவும், ஒழுங்குமுறையுடனும் மேற்கொள்ளும் நோக்கில், சிறைத் துறையில் புதிய வாரியத்தை (Transfer Board) சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அமைத்துள்ளார்.
இதற்காக, அத்துறை ஐஜி தலைமையில் 4 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. சிறைத் துறையில் பணியிட மாற்றங்கள் தொடர்பாக எழும் நிர்வாக சிக்கல்கள், பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் சேவைத் தேவைகளை ஒருங்கிணைத்து தீர்வு காணும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, 2-ம் கிரேடு வார்டன்கள், முதல் நிலை வார்டன்கள், தலைமை வார்டன்கள் மற்றும் சிறை அதிகாரிகள் வரையிலான பணியிட மாற்றங்கள் இந்த வாரியத்தின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
பணியிட மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்ய இந்த வாரியம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கூட உள்ளது. தேவைக்கேற்ப அவசரக் கூட்டங்களும் நடத்தப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைத் துறையின் நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்துவதோடு, பணியாளர்களின் இடமாற்றம் தொடர்பான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை விரைவாக பரிசீலித்து முடிவு எடுப்பதற்கும் இந்த வாரியம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பணியிட மாற்றங்களில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் வெளிப்படைத் தன்மை மற்றும் நிர்வாக திறன் மேம்படும். புதிய வாரியம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம், பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களில் தெளிவான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு சிறைத் துறை பணியாளர்களிடையே உருவாகியுள்ளது.
இதன்மூலம், நீண்டகாலமாக நிலவி வந்த சில நிர்வாக பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறைத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.