

சென்னை: மின் கட்டணம் உயர்வு குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்றும் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டில் மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின்படி 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
மின் கட்டணத்தை உயர்த்தினால் தான் உதய் மின் திட்டத்தில் கடனுதவிகள் கிடைக்கும். இதன் காரணமாக 2026-27-ம் ஆண்டுவரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
அதன்படி 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவானதோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
அதன்படி ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது இருப்பினும் கடந்த திமுக அரசு, ஒரு சில ஆண்டுகளில் வீட்டு மின் இணைப்புகளுக்கான கட்டண உயர்வை அரசே ஏற்கும் என அறிவித்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு 3.86 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படலாம் எனக் கூறப்படும் நிலையில் கட்டணம் உயர்வு குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆட்சியில் 2022-ம் ஆண்டில் மின் கட்டணம் நிர்ணயம் செய்வதில் திருத்தம் மேற்கொண்டனர். இதன்படி ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமே கட்டணம் உயர்த்தும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு உயர்த்த வேண்டும் என ஏற்கெனவே ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுகளில் உள்ளது. தற்போது முதல்வர், நிதித்துறை செயலரிடம் ஆலோசித்து பின், முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிப்படைத்தன்மை
சிறைத் துறையில் தேவையில்லாத பணியிடமாற்றங்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதை நிறுத்துமாறு கூறியுள்ளோம். சிறைத் துறை, மின் துறை என எந்தத் துறையிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியிடமாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.