நெல்லை முபாரக்

 
தமிழகம்

எஸ்டிபிஐ கட்சியில் இருந்து நெல்லை முபாரக் விலகல்

வெற்றி மயிலோன்

சென்னை: கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் இத்துடன் விலகுவதாக எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நான் கடந்த 31 ஆண்டுகளாக இறைநாட்டப்படி பொது வாழ்வில் பயணித்து வருகிறேன். அதில் எனது அரசியல் பயணமாக, எஸ்டிபிஐ கட்சியின் தமிழக முதல் உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கி, முதல் மாநில நிர்வாகப் பொதுச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர், அதனைத் தொடர்ந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாநிலத் தலைவர், தேசியச் செயற்குழு உறுப்பினர் மற்றும் தேசியச் செயலக உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை என்னால் இயன்றவரை சுமந்தேன். இறைநாட்டப்படி மனசாட்சியோடு செயல்பட்டேன்.

ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்த சில கசப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, பலவிதமான அவதூறுகள் தேவையற்ற வகையில் பரவி வருகின்றன. இதனால் மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

எனவே, இந்தக் கடினமான, கசப்பான சூழலில் தொடர்ந்து என்னால் எஸ்டிபிஐ கட்சியில் பயணிக்க இயலாத நிலையில் உள்ளேன். ஆகவே, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் இத்துடன் விலகிக் கொள்கிறேன்.

இதுகாறும் எனக்கு அனைத்து வகையிலும் உதவிய, ஒத்துழைப்பு நல்கிய எனது சக மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தேசியச் செயற்குழு உறுப்பினர்களுக்கும், அண்டை மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்டம் முதல் கிளை வரையிலான நிர்வாகிகளுக்கும், துணை அமைப்புகளின் உறவுகளுக்கும் மற்றும் என் இதயம் நிறைந்து நிற்கின்ற சகோதர, சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த ஆயிரமாயிரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடைந்த, கனத்த இதயத்துடன் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT