இயற்கை விவசாயி நம்மாழ்வார்

 
தமிழகம்

நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி: நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் வரவேற்பு

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: நம்மாழ்வார் பெயரில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படுமென, வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளமைக்கு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில், கலந்துகொண்ட தமிழக வேளாண்துறை அமைச்சரிடம், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பெயரில், அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

உடனடியாக அதனை ஏற்று, இந்த நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலும், நம்மாழ்வாரின் புகழைப் போற்றும் வகையிலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு உள்ளது.

இந்த அறிவிப்புக்கு பாரம்பரிய இயற்கை விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் சார்பிலும், ஒட்டுமொத்த தமிழக இயற்கை விவசாயிகளின் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தமிழக முதல்வருக்கும், வேளாண்துறை அமைச்சருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். நம்மாழ்வார் பெயரில் அமையவுள்ள இக்கல்லூரி, எதிர்காலத் தலைமுறையினருக்கு நஞ்சில்லா இயற்கை வேளாண்மையைக் கற்றுத்தரும் மிக முக்கிய மையமாக விளங்கும்.

மறைந்த நெல் ஜெயராமன் வழியில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் நமது முயற்சிக்கு, அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்துள்ளது. மண்வளம் காக்கவும், நஞ்சில்லா உணவு உற்பத்தியை பெருக்கவும் தொடர்ந்து பாடுபட்டு வரும் தமிழக அரசுக்கும், இந்த உன்னத முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக” செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT