பழநி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர், பத்திர எழுத்தர் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

பழநி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர், பத்திர எழுத்தர் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
Updated on
1 min read

மதுரை: பழநி கோயில் நில மோசடி வழக்கில் சார்பதிவாளர், பத்திர எழுத்தரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் நூறு கோடி மதிப்புள்ள நிலம், தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சார்பதிவாளர் (பொறுப்பு) ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். பழநி கோயில் கண்காணிப்பாளர் சார்பில் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. சம்பந்தப்பட்ட நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என முந்தைய சார்பதிவாளர் மினிட் புத்தகத்தில் குறிப்பு எழுதியுள்ளார். இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் பொறுப்பு சார்பதிவாளர் நிலத்தை பதிவு செய்துள்ளார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

சம்பந்தப்பட்ட நிலம் கோயிலுக்குச் சொந்தமானது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்பது பத்திர எழுத்தருக்கு நன்கு தெரியும். இருப்பினும் பொறுப்பு சார்பதிவாளருடன் இணைந்து செயல்பட்டுள்ளார். மனுதாரர்கள் இருவரும் பத்திரப் பதிவின்போது நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடி உள்ளனர். நேரில் சந்தித்தும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

பொறுப்பு சார்பதிவாளர் மீது, ஏற்கெனவே 2 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போதைய மோசடிக்கு பின்னணியாக செயல்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். இதனால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில், இடைக்கால முன்ஜாமீன் காலத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. முந்தைய சார்பதிவாளர்தான் பதிவு செய்துள்ளார். நான் ஆவண எண் வழங்கி அடுத்தக்கட்ட பரிசீலனைக்காக மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைத்தேன். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இவற்றை பதிவுசெய்து கொண்ட நீதிபதி ராஜசேகர் 2 பேரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பழநி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர், பத்திர எழுத்தர் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்த தங்கம் விலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in