தமிழகம்

தமிழக அரசு இடத்தில் முருகனும் வேண்டாம், சிலுவையும் வேண்டாம்: உயர் நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: குமரி மாவட்டத்தில் மலையில் இருந்த முருகன் சிலை அகற்றப்பட்ட வழக்கில், அரசுக்கு சொந்தமான இடத்தில் முருகனும் வேண்டாம், சிலுவையும் வேண்டாம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பேயன்குளம் கிராமத்தில் உள்ள மயிலாடும்பாறையில் இருந்த முருகன் சிலையை அகற்றி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முருகன் சிலையை மீண்டும் அமைக்க உத்தரவிடக் கோரி, சந்திரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மயிலாடும்பாறையில் மீண்டும் முருகன் சிலை வைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஊத்துக்குளியைச் சேர்ந்த சில்வன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அதில், முருகன் சிலை 100 ஆண்டுகள் பழமையானது என பிரதான வழக்கின் மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், 2022-ல் எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோவில் மலை உச்சியில் முருகன் சிலை இல்லை. எனவே, முருகன் சிலை பழமையானது என்பதை ஏற்க முடியாது. இது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

உரிய அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும், அவை வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அவற்றை அனுமதிக்கக் கூடாது என, தமிழ்நாடு மேம்பாடு மற்றும் கட்டிட விதிகள் கூறுகின்றன.

அதன் அடிப்படையில், அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட முருகன் சிலை அகற்றப்பட்டது. சிலையை மீண்டும் வைக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தரப்பில் சம்பந்தப்பட்ட நிலம் யாருக்குச் சொந்தமானது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மனுதாரர் சார்பில், நிலம் அரசுக்கு சொந்தமானது? அரசு புறம்போக்கு நிலம் எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் இது தொடர்பாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், நிலம் அரசுக்கு சொந்தமானது என்று சொல்லும்போது, அங்கு முருகனும் வேண்டாம், சிலுவையும் வேண்டாம். விசாரணை டிசம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT