தமிழகம்

எஸ்ஐஆர் பணியில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு: இறந்தவர்கள் மட்டும் 25.72 லட்சம் வாக்காளர்கள்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் டிச.16-ம் தேதியுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணியில் 77.52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த அக்.27-ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 2002, 2005-ம் ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இப்போது தான் எஸ்ஐஆர் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக மற்றும் பாஜக ஆதரவு தெரிவித்துள்ளன. அக்.27-ம் தேதிப்படி தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

நவ.4-ம் தேதி முதல் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணியில் 68,470 பிஎல்ஓக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 2,38,853 பிஎல்ஏக்கள் நியமிக்கப்பட்டு, பிஎல்ஓக்களுக்கு உதவி வருகின்றனர். இதுவரை 6.37 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் 6 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இப்பணி டிச.11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி, எஸ்ஐஆர் நடவடிக்கையில் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அதன் மீது ஆட்சேபங்கள் தெரிவிப்பதற்கான காலக்கெடு டிச.16 முதல் ஜன.15 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

படிவங்களை கணினியில் பதிவேற்றும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதில் இறந்தவர்கள், படிவத்தை வழங்க முடியாதவர்கள், நிரந்தரமாக குடியேறியவர்கள் என வகை பிரித்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் இதுவரை இறந்தவர்கள் 25.72 லட்சம் வாக்காளர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் 8.95 லட்சம் பேர், நிரந்தரமாக குடியேறி சென்றவர்கள் 39.27 லட்சம் பேர், 3.32 பேர் ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், இதர காரணங்களால் படிவம் வழங்க முடியாத 24,351 பேர் என மொத்தம் 77.52 லட்சம் பேர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, வரும் டிச.16-ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர்பட்டியலில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 10.40 லட்சம் பேர் (இறந்தவர்கள் மட்டும் 1.49 லட்சம்) பேர் நீக்கப்படலாம். அதற்கடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 5.31 லட்சம் பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 3.89 லட்சம் பேர், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 39 ஆயிரம் பேர் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுடன் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்தப் பட்டியல் டிச.11-ம் தேதி எஸ்ஐஆர் படிவம் பெறும் காலம் நிறைவடைந்த பின்னர் இறுதி செய்து, டிச.16-ம் தேதி வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.

சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 10.40 லட்சம் பேர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 90 ஆயிரம் பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 88 ஆயிரம் பேரும், கொளத்தூர் தொகுதியில் 73 ஆயிரம் பேரும், சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியில் 83 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமாக திரு.வி.க.நகர் தொகுதியில் 32 ஆயிரம் பேரும் நீக்கப்படலாம்.

234 தொகுதிகளுக்கு அதிகாரிகள் நியமனம்: தமிழகத்தில் தற்போது 68 ஆயிரம் வாக்குச் சாவடிகள் உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது, 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிக்கும் திட்டத்தையும் தேர்தல் ஆணையம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை சுமார் 74 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு தமிழக அரசிதழிலிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி பகுதிகளில் மண்டல அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட வழங்கல் அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிக அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT