அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் போன்றவை அதிகரித்துள்ளதால், பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது.
திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, வருவாய் மாவட்டத் தலைநகரங்களில், மார்ச் 17-ம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.