சென்னை: டெல்லி நகரில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டு அரங்குக்குள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மேலாடையின்றி நடத்திய போராட்டம் அநாகரிகமானது என தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: உலக நாடுகளின் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பில் நடத்தப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், இந்தியாவின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் செயல்பட்டுள்ளது மிகுந்த கண்டனத்துக்குரியது.
நாடாளுமன்றம் தொடங்கி ஏஐ மாநாடு வரை எங்கும், எதிலும் அடாவடித்தனத்தோடு செயல்பட்டு, மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த முயற்சிக்கும் காங்கிரஸ் தனது அராஜக போக்காலே மேன்மேலும் வீழும்.
பாமக தலைவர் அன்புமணி: இந்தியாவையும், உலகையும் அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வது எவ்வாறு என்பது குறித்து விவாதிக்கும் மாநாட்டில், நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் செல்வது போன்ற செயலில் ஈடுபட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சி எங்கு இருக்கிறது என்பதை உலகுக்கு காட்டியிருக்கிறது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக் கூடிய நிகழ்வில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பாடு அநாகரிகமானது. இதன்மூலம் தங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவப்பெயரை தேடித் தந்திருக்கிறார்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இந்தியாவின் உயர்வை மற்ற வளர்ந்த நாடுகளிடம் எடுத்துகாட்டக் கூடிய மாநாட்டில், நாட்டின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இளைஞர் காங்கிரஸார் நடந்து கொண்ட செயலால் நாடே தலைகுனிகிறது. இந்த அநாகரிகமான செயல்பாடு அக்கட்சியின் தரத்தை வெளிப்படுத்துகிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி நடத்தப்பட்ட மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியிருக்கும் அநாகரிகமான செயல் கடும் கண்டனத்துக்குரியது. கழுதை தேய்ந்து கட்டெறும்பானகதையைப் போல கரைந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் கீழ்த்தரமான செயல்கள், இந்திய நாட்டின் மீதான அக்கட்சியின் தேசவிரோத எண்ணத்தை காட்டுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.