

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் டெண்டர் முறைகேடு மற்றும் ஊழல் விவகாரத்தில், ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்ட அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பணி நியமனங்களில் பெரும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அமலாக்கத் துறை ஏற்கெனவே 2 முறை கடிதங்களை அனுப்பி இருந்தது.
அதில், அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக டெண்டர்கள் முறைகேடாக கையாளப்பட்டு, ஒப்பந்தத் தொகையில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த தொகை ‘கட்சி நிதி’ என்ற பெயரில் திரட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த லஞ்சத் தொகையின் நேரடி பயனாளிகளாக திமுக கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் இருந்ததாக வும், அந்த நிதி அவர்களிடம் சென்றதாகவும் அமலாக்கத் துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில், டெண்டர் முறைகேட்டில் சில ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று அமலாக்கத் துறை தனது சமீபத்திய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. கவி பிரசாத், டி.ரமேஷ், கே.என்.மணிவண்ணன், பிரபு உள்ளிட்டோர் இந்த ஊழல் செயல்பாடுகளில் முக்கியபங்காற்றியதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களின் செல்போன்களில் இருந்து கைப்பற்றப்பட்ட உரையாடல்கள் முக்கிய ஆதாரங்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சர்களுக்கு சாதகமாக டெண்டர் நிபந்தனைகளை மாற்றியமைப்பதில் சில ஐஏஎஸ் அதிகாரிகள் துணை நின்றதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கான சீருடை கொள்முதல் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட ஒருவருக்கு பெற்றுத் தருவதற்காக, அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஒரு இளம் ஐபிஎஸ் அதிகாரி இடைத்தரகரை தொடர்புகொண்டதாகவும், இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அந்த அதிகாரி ரகசிய மற்றும் சென்சிட்டிவ் தகவல்களை மூன்றாம் நபர்களுடன் பகிர்ந்ததாகவும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான செயல் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தனிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமலாக்கத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சத் தொகை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஹவாலா முறையில் சட்டவிரோதமாக பரிமாறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை தொடங்க வேண்டும் என்றும் ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்தக் கடிதத்தில் அமலாக்கத் துறை அறிவுறுத்தியுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் இந்த முறைகேடு விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகள் பெயர் வெளியானது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.