சென்னை: மருத்துவ மாணவர்கள் மனநல ஆலோசனைப் பெற தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்னை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "மருத்துவ பட்டப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வருகின்ற மே 3ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழக அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே,'டெலி கவுன்சிலிங்' (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் ”14416” அல்லது ”104” ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.