தமிழகம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சுமுக உடன்பாடு: பாஜக 27, பாமக 18, அமமுக 11 இடத்தில் போட்டி

மீதியுள்ள 178 இடங்களில் அதிமுக, இதர கட்சிகள் களமிறங்குகின்றன

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது.

          

தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்டிஏ) பொருத்தவரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் கூட்டணியை உறுதி செய்தார். ‘‘தமிழகத்தில் என்டிஏ கூட்டணியின் தலைவர் பழனிசாமிதான். அவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்’’ என்றும் அறிவித்தார்.

பின்னர், கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி இணைந்து, அதிமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் பெற்றார். எதிர்பாராத திருப்பமாக அமமுகவும் கூட்டணியில் இணைந்தது. அதேநேரம், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறி, திமுக கூட்டணியில் இணைந்தது.

இதற்கிடையே, பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது 2 கட்டங்களாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு பாமக, அமமுக கூடுதல் தொகுதிகள் கேட்டதால், முடிவெடுக்க முடியாத நிலை நீடித்தது. பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், டிடிவி தினகரனும் சென்றார்.

பியூஷ் - ஜி.கே.வாசன் சந்திப்பு: இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சென்னை வந்தார். அவரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். கிண்டியில் உள்ள ஓட்டலில் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அங்கு வந்து, மரியாதை நிமித்தமாக பியூஷ் கோயலை சந்தித்துவிட்டு சென்றார்.

நிர்வாகிகள் பேச்சுவார்த்தை: பின்னர், என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்களான பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், அன்புமணி, தினகரன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு பழனிசாமி, பியூஷ் கோயல் முன்னிலையில், அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி ஆகியோருடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. அதன்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.

எந்தெந்த தொகுதிகள்: இதர கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொகுதிப் பங்கீடு இன்று இரவுக்குள் முடிந்துவிடும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து கலந்துபேசி, பின்னர் அறிவிக்கப்படும்.

கருத்துப் பரிமாற்றத்துக்காக டெல்லி சென்று ஆலோசனை நடத்துகிறோம். ஆனால், நாங்கள் டெல்லி சென்றாலே, முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தால் அச்சப்படுகிறார். திட்டமிட்டு அவதூறு பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் - திமுக இடையே 20 நாட்கள் வார்த்தைப் போர் நடந்து வந்தது. எங்கள் கூட்டணி அப்படி இல்லை. மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரே நோக்கம். இது உணர்வுப்பூர்வமான கூட்டணி. எங்கள் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பியூஷ் கோயல் கூறும்போது, ‘‘வருங்கால முதல்வர் பழனிசாமியை சந்தித்தேன். இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். ஊழல் மிகுந்த ஸ்டாலின் அரசு, உதயநிதி அரசு அகற்றப்பட வேண்டும்’’ என்றார். மற்ற தலைவர்கள் கூறியதாவது:

டிடிவி தினகரன்: நாங்கள் கேட்டதில் 99 சதவீதத்துக்கு மேல் கொடுத்துள்ளனர். குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். நான் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு 1987 முதல் வந்து கொண்டிருக்கிறேன். கடந்த 7, 8 ஆண்டுகளாக வரவில்லை. மீண்டும் ஜெயலலிதாவின் அலுவலகத்தில் அவரது இருப்பை உணர முடிகிறது.

தமிழிசை: எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளது. எதிர் அணியில்தான் குழப்பம் நீடிக்கிறது.

அன்புமணி: திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதனால், சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க முடியாமல், 28 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர். கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சிதறி இருந்ததால் திமுக வெற்றி பெற்றது. இன்று அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டோம். ராமதாஸ், சசிகலாவால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தையின்போது, கூட்டணிக் கட்சித் தலைவர்களான பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோர் பங்கேற்ற நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கவில்லை. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT