நாஞ்சில் சம்பத்

 
தமிழகம்

“திராவிட இயக்கத்தின் நீட்சியே விஜய்!” - தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் விவரிப்பு

தமிழினி

சென்னை: “தவெக தலைவர் விஜய்யை சந்தித்த தருணத்திலிருந்து புதியதாக பிறந்ததைப் போல் எண்ணி பூரிக்கிறேன். திராவிட இயக்கத்தின் நீட்சியாகத்தான் விஜய்யைப் பார்க்கிறேன்” என்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று (டிச.5) அக்கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “தமிழக வரலாற்றில் லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்துள்ள இயக்கம் தவெக. நான் கடந்த 6 ஆண்டுகளாக என்னை எந்த அரசியல் கட்சியிலும் இணைத்துக் கொள்ளாமல் இருந்தேன். பெரியார், அண்ணா லட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன்

பாஜகவுடன் இணக்கமாக உள்ளீர்களா என விஜய்யிடம் கேட்டேன். ஆனால், விஜய் அதை மறுத்துவிட்டார். இங்கு அதிகாரத்தில் உள்ள கட்சியைக் கூர்மையாக விமர்சனம் செய்கிறேன் எனக் கூறினார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி விஜய் பேசாமல் இருப்பது ஒருவகையில் நல்லது. இளைஞர்கள் மூலம் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் விஜய்யிடம் உள்ளது என நம்புகிறேன்.

அறிவாலயத்தில் இருந்து வசை சொற்களால் வசைபாடினார்கள். அதனால் மனமுடைந்துபோனேன். திமுகவின் அறிவுத் திருவிழாவில் திட்டமிட்டு என்னை நிராகரித்தனர். எந்தப் பரிந்துரைக்கும் திமுகவினர் முன் நான் சென்று நிற்பதில்லை. கேட்டால் சைக்கிள்கூட தரமாட்டார்கள். என் வயிற்றில் அடிப்பது போல், என் நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

எந்த திசைக்கு போக வேண்டும் என்பதை தெப்பம் தீர்மானிக்க முடியாது; தண்ணீர் தான் தீர்மானிக்கும். நானொரு தெப்பம்; என்னுடைய திசையை தம்பி விஜய் தீர்மானித்திருக்கிறார். தவெக தலைவர் விஜய்யை சந்தித்த தருணத்திலிருந்து புதியதாக பிறந்ததைப்போல் எண்ணிப் பூரிக்கிறேன்.

கடந்த கால காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன். உற்சாக மனநிலையில் உள்ளேன். தவெக தலைவர் விஜய், என்னைப் பார்த்ததும், “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார். நான் மெய்சிலிர்த்துப் போனேன்.

பெரியார், காமராஜரை கொள்கைத் தலைவர்கள் என தம்பி விஜய் முன்னிறுத்துகிறார். தமிழ்நாட்டில் இனி பேசுவதற்கு நிறைய உள்ளன. பரபரப்பாகவே இருக்கும். திராவிட இயக்கத்தின் நீட்சியாக தான் விஜயை பார்க்கிறேன்.

என்னை முடக்கி வைத்திருந்தனர். தற்போது இயங்குவதற்கான வாய்ப்பை விஜய் கொடுத்திருக்கிறார். கொள்கை எதிரி என பாஜகவையும், அரசியல் எதிரி என திமுகவையும் ஒரே நேரத்தில் எதிர்க்கிறார். இந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன்

திமுகவில் தான் ஆயுள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். ஆனால் வைகோவின் இருப்புக்கு ஆபத்து வந்த நேரத்தில் திமுகவிலிருந்து நானாகவே வெளியேறினேன். அவர்கள் என்னை வெளியேற்றவில்லை. அண்ணன் வைகோவின் தலைமையை ஏற்று 19 ஆண்டு காலம் பணியாற்றினேன். என்னுடைய இருப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் நான் வெளியேறினேன்.

அதிமுக எனக்கு ஓர் அடைக்கலம் கொடுத்தது. ஆனால், பின்னர் என்னை கொலை செய்யும் அளவுக்கு திட்டம் தீட்டினார்கள். அதன்பிறகு ஜெயலலிதாவிடம் சென்றேன்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்க விரும்பவில்லை. சசிகலாவுடன் சேர்ந்து பயணிக்கலாம் என நினைத்தபோது அவர் சிறைக்குச் சென்றார். டிடிவி தினகரனுடன் சிறிது காலம் பயணித்தேன். அவர் திடீரென அமமுக என்ற கழகத்தை பற்றி கூறினார். அதில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை அதனால் அதிலிருந்து வெளியேறி விட்டேன். கொள்கை எதிரி என பாஜகவையும், அரசியல் எதிரி என திமுகவையும் ஒரே நேரத்தில் விஜய் எதிர்க்கிறார். இந்தத் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT