

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்
சென்னை: தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் மதிமுக, அதிமுக, அமமுக என ஒரு வலம் வந்துவிட்டு தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே, பல்வேறு பேட்டிகளில், “விஜய் அரசியல் கட்சித் தொடங்கினால், என்னை அழைத்தால் அரசியல் ஆலோசனைகள் வழங்குவேன்” என்று அவர் கூறியிருந்தது இந்த வேளையில் நினைவுகூரத்தக்கது.
யார் இந்த நாஞ்சில் சம்பத்? - எந்தக் கூட்டத்தில் பேசினாலும் தனது கம்பீரமான உரையால் பார்வையாளர்களை தன் வசம் இழுப்பதில் கைதேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். கல்லூரிக் காலத்திலேயே தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டவர், அந்தக் காலத்திலேயே கருணாநிதியால் பாராட்டப்பட்டார். இருப்பினும் வைகோ மீதான ஈர்ப்பால் அவர் மதிமுகவைத் தொடங்கியபோது அவர் பின்னால் நின்றார்.
தொடர்ந்து வைகோவுடனும் மனக்கசப்பு வர, அதிமுகவில் ஐக்கியமானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தினகரன் அணிக்குச் சென்றவர், அமமுக உதயமானதும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை எனச் சொல்லி தினகரனை விட்டு விலகினார். பின்னர் திராவிடப் பேச்சாளர் என்னும் அடைமொழியோடு திமுக மேடைகளில் பேசினார். ஆனால் திமுக அவரை பெரிதாக அங்கீகரிக்கவில்லை. அதனை அவருமே வெளிப்படையாகப் பல்வேறு இடங்களில் ஆதங்கத்துடன் கூறிவந்தார்.
அரசியல் தவிர பள்ளி - கல்லூரி விழாக்களிலும் தொடர்ந்து பேசிவந்தார் நாஞ்சில் சம்பத். அதனால் இலக்கிய மேடைகளும் அவருக்கு புகழ் வெளிச்சமும், வருமானமும் கொடுத்தன. ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று (டிச.5) தவெகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிமுகவின் அடையாளங்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். தற்போது திமுக, அதிமுக, மதிமுக என பல கட்சிகளிலும் அனுபவம் பெற்ற சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்துள்ளார்.
“தவெகவை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பேன்” - இந்நிலையில் இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி விஜய் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார், நான் மெய்சிலிர்த்துப் போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே!” என்று தெரிவித்துள்ளார்.