தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்
விஜய் முன்னிலையில் நேற்று தவெக-வில் இணைந்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், “தவெக-வை புகழ்ந்ததால் அறிவாலயத்தில் இருந்து, காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளால் என்னை வசை பாடினர்” என்று தெரிவித்தார்.
நாஞ்சில் சம்பத் சமீபகாலமாக பொதுவெளியில் தவெக-வுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தார். அதனால் அவர் தவெக-வில் இணையக் கூடும் என்ற தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யை, நாஞ்சில் சம்பத் நேற்று சந்தித்து தன்னை தவெக-வில் முறைப்படி இணைத்துக்கொண்டார். அப்போது விஜய்க்கு ‘நீயும் முதல்வராகலாம்’ என்ற புத்தகத்தை அவர் பரிசளித்தார். தொடர்ந்து, நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
என்னைப் பார்த்ததும் விஜய், “நான் உங்கள் ரசிகன்” என்று தெரிவித்தார். அப்படி அவர் சொன்னதும் நான் மெய்சிலிர்த்துப் போனேன். இப்படி ஒரு அங்கீகாரத்தை அவர் வழங்குவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கரூர் துயரத்துக்கு சிபிஐ விசாரணைக்கான உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியபோது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நான், இது தவெக-வின் வெற்றி என்று குறிப்பிட்டிருந்தேன்.
அந்த நிமிடத்திலிருந்து அறிவாலயத்தில் இருந்து காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் என்னை வசைபாடினர். தொடர்ந்து என் வயிற்றில் அடிப்பது போல, ஏற்கெனவே முடிவாகி இருந்த எனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர்.
திமுக நிகழ்ச்சிகளில் என்னை நக்கலும் நையாண்டியும் செய்தனர். மேடைகளில் வசை பாடினர். அதனால் நான் மனதளவில் உடைந்து போனேன். மேலும், எனக்கு பல்வேறு மிரட்டல்களும் வந்தன.
திராவிட இயக்க சித்தாந்தத்தை வழிகாட்டும் பெரியாரை தான் விஜய் முன்னிறுத்துகிறார். அதனால் திராவிட கட்சியின் நீட்சியாகவே விஜய்யை பார்க்கிறேன்.
விஜய் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறார் என்பது அவர் அறிவிக்க உள்ள தேர்தல் அறிக்கை மூலம் தெரியும். தமிழக அரசியலில் அதிக அளவு இளைஞர்களை விஜய் ஈர்த்து வைத்து இருக்கிறார். நிச்சயம் இளைஞர்கள் மூலம் மாற்றத்தை அவர் கொண்டு வருவார். இவ்வாறு அவர் கூறினார்.