நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம் 
தமிழகம்

“பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் இணைய வேண்டும்” - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் இணைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியில் பேச்சி ஓடையின் குறுக்கே நபார்டு நிதி உதவியுடன் ரூ.6 கோடியில் அமைய உள்ள பாலத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகரித்துவிட்டது. மாணவர்கள் கையில் புத்தகம் ஏந்தி கல்வி நிலையங்களுக்கு செல்லும் வயதில் அரிவாள் தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினேன்.

இதன் மூலம் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தப் போவதில்லை. மாறாக, தமிழக மக்களே திமுக ஆட்சிக்கு எதிராக சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த தயார் நிலையில் உள்ளனர். அதாவது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தை திமுக ஆட்சியாளர்களே, மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டனர். வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்படும். தேர்தலுக்கு இன்னும் 90 நாட்களுக்கு மேல் உள்ளது. பொங்கலுக்கு பிறகு கூட்டணியின் நிலை குறித்து உறுதியான தகவல்கள் அறிவிக்கப்படும்.

வரும் 4-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சி வருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறும், ‘தமிழகம் தலைநிமிர தமிழன் பயணத்தில்’ பங்கேற்க இருக்கிறார். மறுநாள் 5-ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகிறார். அன்றே டெல்லி திரும்புகிறார். தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு பிரதமர் வருகை இல்லை. பழனிசாமி தரப்புடன் ஓ.பன்னீர்செல்வம் இணைய வேண்டும். இணைவார்கள் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது குறித்து எனக்கு தெரியவில்லை. அது அதிமுக விவகாரம். ஆனால், இருவரும் இணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் தமிழக அரசு பணம் எதுவும் கொடுக்கவில்லை. இந்த ஆண்டு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், தனியாரிடம் கடன் வாங்கியாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உள்ளனர். தமிழகத்தின் அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு 60 சதவீத நிதியை கொடுக்கிறது. எஞ்சிய 40 சதவீதம் மட்டுமே மாநில அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நிதி நிர்வாகமும் சரியில்லை, நீதி நிர்வாகமும் சரியில்லை தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாத சிலர், பொங்கல் வாழ்த்துகளை தெரிவிப்பார்கள். அவர்கள்,தமிழர் திருநாள் எனக் கூறி தப்பித்துக் கொள்வார்கள். தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாமல் கிறிஸ்துமஸ் வாழ்த்து மட்டும் தெரிவிக்கும் அவர்கள் போலி மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கின்றனர்.

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தீபாவளி கொண்டாட வேண்டாம் என தனது கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், தற்போதுகிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களால் அவரும் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT