

தியாகதுருகத்தில் ஜன. 5-ல் நடைபெற உள்ள மாவட்ட மகளிரணி பொதுக்கூட்டத்துக்காக பந்தக்கால் நடும் நிகழ்வில் பங்கேற்ற அதிமுகவினர்.
கடந்த டிசம்பர் 26-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், “கடந்த நான்கரை ஆண்டுகளில் நாங்கள் செய்ததில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததா..? அவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியுமா..? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச்” என்று சவால் விடுத்திருந்தார். இந்த சவாலுக்கு வரும் 5-ம் தேதி பதிலளிக்க தயாராகி வருகிறது கள்ளக்குறிச்சி அதிமுக.
ஸ்டாலின் சேலஞ்ச் வைத்த மறுநாளே, “அதிமுக ஆட்சியில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டமே உருவானது. இது தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றே சொல்லும் அதிமுக அரசின் சாதனையை. அதிமுக ஆட்சியின் பல திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி, ஸ்டிக்கர் ஒட்டுவதையே ஸ்டாலின் சாதனையாக கொண்டிருக்கிறார்” என்று அறிக்கை மூலம் பழனிசாமி அதிரடி கிளப்பினார்.
அது போதாதென்று கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தியாகதுருகம் பகுதியில் ஜனவரி 5-ல் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறாராம் பழனிசாமி.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், “முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் எங்களது பொதுச்செயலாளர் பழனிசாமியும் பங்கேற்கிறார். அந்தக் கூட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், பெண்களுக்கான பாதுகாப்பற்ற சூழல் குறித்து பேசப்போகும் பொதுச்செயலாளர், அதிமுக அரசின் சாதனை பட்டியலையும் வெளியிட்டு ஸ்டாலினுக்கு சவால்விட இருக்கிறார்” என்றார்.