நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

 
தமிழகம்

“வீட்டுக்குள்ளேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத பேரவலம்” - நயினார் நாகேந்திரன்

தமிழினி

சென்னை: “பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் மெத்தனப் போக்கைத் தொடர்ந்து சகித்துக்கொள்ள முடியாது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள், மேரி ரெஜிலா என்ற பெண்ணை வெட்டிக் கொன்று, அவரது கணவர் முத்துக்குிருஷ்ணன் மற்றும் மகனை உயிருக்கு ஆபத்தான வகையில் தாக்கிய கொடூரமும், கடத்திச் செல்லப்பட்ட அவர்களின் இரு மகள்கள் சில மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவமும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியின் போது வெளியில் சென்றால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்ற அச்சம் நிலவியது. ஆனால், தவெக ஆட்சியில், கதவைச் சாத்திவிட்டுத் தங்கள் சொந்த வீட்டுக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கும், பச்சிளம் பெண் குழந்தைகளுக்கும் கூடத் துளியும் பாதுகாப்பில்லாத பேரவலம் அரங்கேறி வருகிறது.

இதேபோல்தான், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் பெற்றோர் அருகில் உறங்கிக் கொண்டிருந்த 6 வயதுச் சிறுமி மாயமாகி பல நாட்கள் கடந்தும், இதுவரை அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமல் தவெக அரசின் காவல் துறை திணறி வருகிறது.

பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் மெத்தனப் போக்கைத் தொடர்ந்து சகித்துக்கொள்ள முடியாது.

சாத்தான்குளம் தாய் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, நடந்த தவறுகளை உணர்ந்து தவெக அரசு உடனடியாகத் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT