நயினார் நாகேந்திரன்
திமுகவினர் தங்கள் தேர்தல் அறிக்கையை ஹீரோ தேர்தல் அறிக்கை என்றும், ஹீரோயின் தேர்தல் அறிக்கை என்றும் சொல்கிறார்கள். ஆனால், அதை ஒரு ஜீரோ தேர்தல் அறிக்கையாகவும், ஹெராயின் தேர்தல் அறிக்கையாகவும்தான் பார்க்கிறேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகும். திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி அந்த கூட்டணியில் சேர்ந்ததே பெரிய போராட்டமாகத்தான் இருந்தது.
மாணிக்கம் தாகூர், மூத்த தலைவர்கள் என திமுக கூட்டணி தொடர்பாக காங்கிரஸில் பெரும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தான் போட்டியிடுவதாக அறிவித்த தொகுதியில் தற்போது போட்டியிடவில்லை என்று கூறியிருப்பது அவர்களின் கூட்டணியில் நிலவும் சலசலப்பை காட்டுகிறது.
திமுகவினர் தங்கள் தேர்தல் அறிக்கையை ஹீரோ தேர்தல் அறிக்கை என்றும், ஹீரோயின் தேர்தல் அறிக்கை என்றும் சொல்கிறார்கள். ஆனால், அதை ஒரு ஜீரோ தேர்தல் அறிக்கையாகவும், ஹெராயின் தேர்தல் அறிக்கையாகவும்தான் பார்க்கிறேன். தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை உருவாக்கியது திமுக. சொத்துவரி, மின்கட்டணத்தை திமுக ஆட்சியில் உயர்த்தினர். மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி விரைவில் கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு வருகை தர உள்ளார். நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டத்துக்கும் ஓட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் ஒரு சினிமா நடிகர், அவ்வளவுதான். தேர்தல் முடிந்த பிறகு இதற்கான உண்மை தெரியும்.
நான் திங்கட்கிழமை (இன்று) மதியம் 12 மணிக்கு சாத்தூர் தொகுதியில் எனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறேன். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர்கள் வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.