கோப்புப் படம் 

 
தமிழகம்

தேசிய ஜனநாயக கூட்டணி - திமுக இடையேதான் போட்டி: நயினார் நாகேந்திரன்

செய்திப்பிரிவு

ஈரோடு: “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார். 19-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து சிவகிரியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் சிவகிரியில் ‘ரோடு ஷோ’ செல்ல உள்ளார்.

மக்களவையில் பெண்களின் 33 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து மறு வரையறை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதே நேரத்தில் ஆண்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்து விடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீதம் கொடுப்பது மூலம் மக்களவையில் 850 இடங்கள் கொண்டு வரப்படும் இதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு போராட்டம் செய்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை அவர் செய்யவில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. வளர்ந்து வரக்கூடிய மாநிலத்துக்கும், பெண்களுக்கும் இடம் ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மத்திய அரசோடு மோதல் போக்கு இல்லாமல் மக்களுக்கான திட்டங்களை பெற்று தருவதில் முதல்வர் ஸ்டாலின் தவறி விட்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவது தான் அவரது குறிக்கோள். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி” என்றார்.

SCROLL FOR NEXT