மகளிர் இட ஒதுக்கீட்டை கேடயமாக வைத்து தொகுதி மறுவரையறை செய்வதா? - மக்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு

மக்களவையில் கனிமொழி எம்.பி.

மக்களவையில் கனிமொழி எம்.பி.

Updated on
2 min read

புதுடெல்லி: “மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது. மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?,” என்று திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசினார்.

தொகுதி மறு​வரையறை தொடர்​பான 3 மசோ​தாக்​கள் மக்களவை​யில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மசோ​தாக்​கள் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும் இந்த மசோதா மீதான திமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் எம்.பி. கனிமொழி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற உறுப்பினராகவோ, திமுகவின் பிரதிநிதியாகவோ நான் இங்கு நிற்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் 8 கோடி மக்கள் சார்பாக நான் இங்கு நிற்கிறேன். தமிழ்நாடு தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களை வாக்குப்பதிவுக்குப் பிறகு தாக்கல் செய்யலாம் என்ற எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

தமிழகத்தின் குரல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேலும் தமிழகத்தின் குரல் ஒடுக்கப்படுகிறது. இந்த மசோதா இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. தொகுதி மறுவரையறை 1952-ல் தொடங்கியது. நாட்டில் ஜனநாயகம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசியல் சாசனம் நமக்கு இதை வகுத்துக் கொடுத்துள்ளது. மக்கள் தொகை அதிகரிக்கும்போது அதற்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.

நாட்டில், மூன்றாவது தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்பட்ட போது மக்கள் தொகை கட்டுப்பாட்டை மத்திய அரசு வலியுறுத்தியது. இதை ஏற்று தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தின. இதனால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானாவில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது தென் மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த முயற்சி, திட்டமிட்ட அரசியல் செயல்பாடு. மாநில அரசுகள், மத்திய அரசின் கீழ் உள்ள ஒரு அமைப்பு அல்ல. அது நிறுவனமும் அல்ல. எஸ்ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தி உள்ளது. சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய - மாநில அரசுகளுக்கானது. தொகுதி மறுவரையறை மசோதா நியாயமானது என இந்த அரசுக்கு நம்பிக்கை இருந்தால் அது குறித்து அவர்கள் ஏன் ஒவ்வொரு மாநில முதல்வர்களுடனும் கலந்தாலோசிக்கவில்லை.

2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை அவர்கள் ஒத்திவைத்தார்கள். இப்போது பழைய கணக்கெடுப்பைக் கொண்டு அவர்களுக்கு பரிசளிக்கிறார்கள். ஐந்த மாநில தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டுள்ளது. 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடிதம் எழுதின. அதோடு, நாடாளுமன்றத்திலும் எழுப்பின. தற்போது இந்த அரசால் இரண்டு வாரங்கள் கூட காத்திருக்க முடியவில்லை.

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது. மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?,

இதை பாதுகாக்க நாங்கள் பாடுபடுகிறோம். 25 ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரு சிறப்பு கூட்டத்தின் மூலம் தீர்வு காண மத்திய அரசு அவசரப்படுகிறது. இவ்விஷயத்தில் அவசரம் கூடாது. இந்த மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். அங்கு இந்த மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதன் அறிக்கையைப் பெற வேண்டும். அந்த குழுவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்.

இந்த மசோதாக்களுக்கு எதிராக எங்கள் தலைவர் ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார். ஆனால், ஊதாக் கொடியை ஏற்றினாலும் எங்களுக்கு கவலை இல்லை என ஆளும் தரப்பு கூறுகிறது. கருப்புக் கொடியை ஏற்றியதன் மூலம் நாங்கள் எங்கள் எதிர்ப்பை ஒரு அடையாள பூர்வமாகத் தெரிவித்துள்ளோம். இந்த மசோதாக்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

விட்டுக்கொடுக்க மாட்டோம். ஊதா நிறம் என்பது அம்பேத்கர் காட்டியது. அவரது கொடியின் நிறம் அது. அவர்தான் அரசியல் சாசனத்தை கொண்டுவந்தார். நீங்கள் அதை நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறீர்கள். நாங்கள் அதை பாதுகாக்க முயல்கிறோம்.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை ஒரு திருஷ்டிப் பொட்டு என பிரதமர் கூறினார். காளி கருப்பு ஆடையை அணிபவர். துணிவின் நிறம் அது. நாங்கள் அந்த ஆடையை தேர்வு செய்துள்ளோம். கருப்பு பெரியாரின் நிறம். அவர்தான் எங்களுக்கு சுயமரியாதயை கற்றுத் தந்தார். இந்த மசோதாக்கள் விஷயத்தில் அரசு அவசரம் காட்டக்கூடாது. அரசு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஜனநாயகப்பூர்வமாக செயல்பட வேணடும்” என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>மக்களவையில் கனிமொழி எம்.பி.</p></div>
தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக முதல் தவெக வரை கொந்தளிப்பது ஏன்? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in