கோவை: சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக அரசியல் சூழல் தொடர்பாக, பாஜக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன் மேக்வால் ஆகியோர் சென்னையில் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை.
கள நிலவரம் குறித்து அவர்கள் கேட்டனர். தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தோம். ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது தொடர்பாக பேசவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் பெறப்பட்ட வாக்கு சதவீதம் குறித்து விவாதிக்கப்பட்டது.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களது முக்கிய நோக்கம். எனவேதான், ஒற்றைக் கருத்து கொண்டவர்கள் எங்கள் கூட்டணியில் இணையலாம் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். கூட்டணியில் யார், யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பது அரசியல் சூழலைப் பொறுத்தே அமையும்.
மதுரையில் இந்திரா காந்திக்கு திமுகவினர் கருப்புக் கொடி காட்டினார்கள். கற்களை வீசித் தாக்கினர். ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவானது. எனவே, அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.
திமுகவுக்கு எதிரான வாக்குகளை யார் பெறுகின்றனர் என்பது முக்கியம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்த இறுதி முடிவு ஜனவரியில் தெரியும். தேர்தல் கருத்துக் கணிப்புகள் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். யூகங்கள் அடிப்படையில் அவை மாறுபடும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர்தான் தமிழகத்தில் விடியலுடன் கூடிய ஆட்சி அமையும். சென்னையில் நடந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் குறித்து பேசவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.