மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும், ஒருபோதும் பணம் பலம் வெல்லாது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு 5 ஆண்டுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது.
அதில் ஒன்றிரண்டைத் தவிர வேறு எதையும் நிறைவேற்றவில்லை. இருப்பினும் மக்களை ஏமாற்றும் வகையில், மக்களின் மன நிலையை மாற்றும் வகையிலும் சில அறிவிப்புகளை வெளியிட்டு தேர்தலைச் சந்திக்க உள்ளது.
தமிழகத்தில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என அவர்களின் குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கின்றனர். தற்போது துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்குவதற்காக பல்வேறு தவறான திட்டங்களை, தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். திமுகவுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றவில்லை. தற்போது அதற்குப் பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள திட்டத்தில் அரசு ஊழியர்கள் 10 சதவீத பணம் செலுத்த வேண்டும்.
தேர்தலுக்காக பொங்கல் பணம், கோடை கால நிவாரண நிதி என அறிவித்து மக்களை திசை திருப்பி வருகின்றனர். பண பலம் மற்றும் அதிகார பலத்தை வைத்து மீண்டும் ஆளும் கட்சியாக வந்துவிடலாம் என நினைக்கின்றனர். அது நடக்காது.
தமிழகத்தில் நடப்பதை எல்லாம் மக்கள் புரிந்து வைத்துள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை பொருள் நடமாட்டம். திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 1977 கொலைகள் நடந்துள்ளன. 361 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 38 பேர் பெண் குழந்தைகள். குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் கஞ்சா மற்றும் போதை பொருள் நடமாட்டம்.
விளாத்திகுளம் மாணவி கொலையில் இப்போது வரை போலீஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. குழந்தை உட்பட 60 வயது பெண் வரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சா, போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும். இவை எதையும் கவனத்தில் கொள்ளாமல் முதல்வர் செயல்படுகிறார்.
நடிகர் ரஜினிகாந்த்தை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுன் விமர்சனம் செய்திருப்பது வருந்தத்தக்கது. இதை முதலில் பாஜகதான் கண்டித்தது. ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தோம். அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து எந்தச் சிக்கலும் இல்லை. அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. இந்தத் தேர்தலில் மக்களாட்சி மீண்டும் அமையும். ஒருபோதும் பண பலம் ஜெயிக்காது. மக்களின் பலம்தான் ஜெயிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.