சென்னை: ‘பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: இன்னும் 13 நாட்களில் பொங்கல் திருநாள் வரவிருக்கும் வேளையில் இப்போதுதான் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது திமுக அரசு. பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் வழங்க வேண்டும் என பொதுமக்களும், தொகுப்பில் மஞ்சள் கிழங்கு, வெல்லம் வழங்கிட கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகளும் எதிர்பார்த்து வரும் வேளையில், சொற்பத் தொகையை ஒதுக்கி, அவர்களின் நம்பிக்கையை உடைத்து, ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ளது திமுக அரசு.
ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் நிலையில், கரும்பு, பச்சரிசி, சக்கரை கொள்முதலை முன்பே தொடங்காதது ஏன்? ஒருவேளை, கடைசி நேரத்தில் கண் துடைப்புக்காக ஏனோதானோ எனக் கொள்முதல் செய்து, உழவர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றும் திட்டமா? எனவே காலம்தாழ்த்தாமல் உடனடியாகக் கொள்முதல் செய்து, ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.