டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தார். உடன், தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன்
பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலுடன் அமித் ஷாவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசுகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் குறித்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக - பாஜககூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இந்த கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை வகிக்கிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போதும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைசந்தித்த பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால், 4 தொகுதிகளில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து, 23 தொகுதிகளில் பாஜக களம் கண்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. அதேநேரத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்தது.
தற்போது, 2026 சட்டப்பேரவை தேர்தலில்,பாஜகவின் வாக்கு சதவீதத்தை முன்வைத்து, ஆரம்பம் முதலே அதிமுகவிடம் 50 தொகுதிகளை பாஜக கேட்டு வந்தது. ஆனால், பாஜகவுக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகள் மட்டுமே வழங்குவதாக அதிமுகவினர் தெரிவித்ததாக தகவல்களும் வெளியானது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளின் பட்டியலை பாஜக தயாரித்து வந்தது.
அந்தவகையில், 50 தொகுதிகளின் பட்டியலை பாஜக தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலுடன் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார். இன்று(14-ம் தேதி) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் நயினார் நாகேந்திரன், அந்த பட்டியலை அமித் ஷாவிடம் வழங்குகிறார். குறிப்பாக, சென்னையில் அதிக தொகுதிகளில் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் அமித் ஷா உள்பட தேசிய தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே, தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, அமித் ஷா, தமிழக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அந்த பட்டியல் அதிமுகவிடம் வழங்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.