சென்னை: ‘பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது, திமுக அரசின் நிர்வாக தோல்விக்கான சான்று’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலைக்கழகங்களில் 12-ல் 40 சதவீதத்துக்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட ஆசிரியப் பணியிடங்களும், மீதமுள்ள 9 பல்கலைக்கழகங்களில் 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான ஆசிரியப் பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழக அரசு அலட்சியம்: குறிப்பாக, சென்னை பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் பாதிக்குப் பாதி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள தகவல், திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான சான்றாகும்.
படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பும், படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எதிர்காலமும் உள்ளடங்கிய இவ் விவகாரத்தைத் திமுக அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது? உயர்கல்வித் துறையின் உயிர்நாடியை ஒடுக்கி தமிழக இளைஞர்களின் கல்விக் கனவை சாம்பலாக்கு வதுதான் திமுகவின் சமூக நீதியா? இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.