சென்னை: ஹிஜாப் அணிந்து முருகன் பாடலைப் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் விடுத்தவர்களுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு பாட்டு நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய சிறுமி, ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்’ என்ற பக்திப் பாடலைப் பாடினார் என்பதற்காக, அச்சிறுமிக்கு சில இஸ்லாமியர்கள் மிரட்டல் விடுப்பதை ஆளும் தவெக அரசின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கிறிஸ்தவ மதத்தைப் பின்னணியாகக் கொண்ட, கே.ஜெ.யேசுதாஸின் ஐயப்பன் பாடல்களையும், எல்.ஆர்.ஈஸ்வரியின் அம்மன் பாடல்களையும் கொண்டாடி, ரசித்து வரும் நமது தமிழ் சமூகத்தில், மற்ற மதத்தினர் இந்து பக்திப் பாடல்களை பாடுவது ஒன்றும் புதிதல்ல. அதேபோல், இந்து மதத்தைச் சேர்ந்த பலர், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவப் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளனர்.
‘கலை’ என்ற குடையின் கீழ், நாம் அனைவரும் சமம். அப்படியிருக்கையில் முருகனின் பாடலைப் பாடியதற்காக ஒரு இஸ்லாமிய சிறுமி மீது, இத்தனை வெறுப்புகள் பரப்பப்படுவது மன வேதனையளிக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அதுமட்டுமன்றி, அச்சிறுமிக்கு தமிழக மக்கள் அனைவரும் துணையாக நிற்க வேண்டு மென்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.