சென்னை: பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான தி.நகர் கமலாலயத்தில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: நாட்டுக்குத் தேவையான முக்கியமான பிரச்சினை குறித்து பேசியதால் முரசொலியில் எனது அறிக்கை வெளியாகியுள்ளது.
அதேபோல், மற்ற நாளிதழ்களிலும் வெளியாகி உள்ளது. ஆனால், முரசொலியில் வெளியானதை மட்டும் ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்? இதை வைத்து, திமுகவும், பாஜகவும் இணக்கமாகச் செயல்படுகிறதா? என்று கேட்பதைவிட நாட்டில் பல முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.
அவை பற்றி கேள்வி எழுப்புங்கள். திமுக ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்களைவிட தற்போது அதிகமான குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. தீபாவளியன்று 15 கொலைகள் நடந்துள்ளன.
எந்தக் காரணத்துக்காக திமுக வெளியேற்றப்பட்டதோ, அதே நிலைதான் தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்கிறது.
தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களின் செயல்பாடுகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள், பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இத்தகைய விவகாரங்களில் முதல்வர் மவுனம் காப்பது ஏன்? மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்று மாணிக்கம் தாகூர் கூறுகிறார். அவர் ஏன் எம்எல்ஏவுக்கு வக்காளத்து வாங்குகிறார்? இவ்வாறு அவர் கூறினார்.
நம்பகத்தன்மையற்ற கட்சி காங்கிரஸ்
பாஜக மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 1967-ம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு விட்டது. அதன்பிறகு மற்ற கட்சிகளின் ஆதரவில்தான் அக்கட்சி அரசியல் நடத்தி வருகிறது.
காங்கிரஸ் நம்பகத்தன் மையற்ற கட்சி. இதை மு.க.ஸ்டாலின், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் உணர்ந்திருப்பார். அதேபோல், முதல்வர் விஜய்யும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதைவிட பெரிய அரசியல் வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் உடனடியாக அங்கு தாவிச் சென்றுவிடும். தமிழக பாஜகவில் அடுத்த 4 ஆண்டுகளில் அமைப்புரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்’’ என்றார்.
மேலிட இணை பொறுப்பாளர்கள் நிர்மல் குமார் சுரானா, டி.கே.அருணா, மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாநில தலைவர் அர்ஜுனமூர்த்தி, செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.