நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: கல்லூரி தொடங்குவதற்கான எனது விண்ணப்பத்தை அரசுவெளியிட்டால், அரசியலை விட்டு விலகத் தயார் என அமைச்சர் செங்கோட்டையனுக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சர் செங்கோட்டையனுக்கு கணக்கு சரியாக வராது. பாஜக வாக்கு வங்கி சரிந்துவிட்டதாகக் கூறுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலைவிட தற்போது 0.8 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். இந்த கணக்கு கூட தெரியாதவர் வருவாய்த் துறையில் என்ன சாதிக்கப் போகிறார்?
நான் கல்லூரி தொடங்க விண்ணப்பித்ததாக கூறப்படும் விண்ணப்பம், செங்கோட்டையனிடம் இருந்தால் அதை வெளியிடட்டும். அது உண்மையாக இருந்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? தமிழகத்தில் ஸ்டூடியோ ஆட்சியை தமிழக வெற்றிக் கழகம் நடத்தி வருகிறது. சட்டப்பேரவையில் ஆதாரமற்ற கருத்துகளை முதல்வர் பேசுவதை, பேரவைத் தலைவர் அனுமதிக்ககூடாது. டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தயாரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடக முதல்வர்டி.கே.சிவக்குமாரின் நண்பர்.
தமிழக அரசின் திட்டங்களையும், தேவையான நிதியையும் பெற்றுத் தர வேண்டிய இடத்தில் உள்ள டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, அண்டை மாநிலத்தைச்சேர்ந்த ஒருவரை நியமிப்பது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழுகிறது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவிக்கான மரியாதையைக் கூட இந்த அரசின் அமைச்சர்கள் கொடுப்பதில்லை. இவ்வாறு கூறினார்.