நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

செய்திப்பிரிவு

திமுகவை ஆட்சிக்கு கொண்டு வரவே விஜய் தனிக்கட்சி தொடங்கியுள்ளார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திருப்பத்தூர் வேட்பாளர் கே.சி.திருமாறனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்தார். அதைத் தொடர்ந்து, முப்பையூரில் காரைக்குடி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி, காளையார்கோவிலில் சிவகங்கை அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன், மானாமதுரையில் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி ஆகியோரை ஆதரித்து நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்தார்.

          

சிங்கம்புணரியிலும், காளையார்கோவிலிலும் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மதுக்கடையை மூடுவதாக சொன்னார்கள். ஆனால் கஞ்சா விற்பனையைத்தான் கூட்டியுள்ளனர். இதனால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. 2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

சொத்து வரியை 200 மடங்கு கூட்டிவிட்டனர். அதேபோல், மின் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிப்பதாக கூறிவிட்டு, கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டனர். அவற்றை செலுத்த முடியாமல் ஏராளமான குடும்பங்கள் தவிக்கின்றன.

தமிழகத்தில் 10,000 சிறு, குறு தொழிற்சாலைகளை மூடி விட்டனர். அமைச்சர்கள் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன. இந்த தேர்தல் மூலம் தனது மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.சிவகங்கை மாவட்டம் எனது சொந்த மாவட்டம் போன்றது. நீங்கள் அனைவரும் என் உறவினர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

மக்களிடையே திமுகவுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. தேர்தலுக்கு ரூ.50,000 கோடி செலவு செய்கின்றனர். வாக்குக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை கொடுக்கின்றனர். செந்தில் பாலாஜி தங்கக் காசு கொடுக்கிறார். இவை எல்லாவற்றையும் மீறி எங்களது கூட்டணி வெற்றிபெறும். திமுக ரூ.8,000 கூப்பன் கொடுப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலை.

விஜய்யால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது. திமுகவை ஆட்சிக்கு கொண்டு வரவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார். எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிவிட முடியாது; அரசியலுக்கு தனி கொள்கை, அமைப்பு, இயற்கையான உணர்வு வேண்டும். முதலில் அவர் நல்ல குடும்பஸ்தனாக இருக்க வேண்டும். அரசியல் என்பது மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும், ஆட்சிக்காக மட்டும் அல்ல. நாங்கள் எந்த மதத்தையும் பிரிக்கவில்லை. மத நல்லிணக்கமே எங்களின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT