தமிழகம்

“விஜய்யின் டெல்லி பயணத்துக்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன் கருத்து

செய்திப்பிரிவு

விஜய் டெல்லி பயணத்துக்கு கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழக பாஜக ஊடக பயிற்சி முகாம் சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால், தேர்தல் அறிக்கை குழு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செய்தி தொடர்பாளர்கள் ஜி.வி.எல். நரசிம்ம ராவ், கவுரவ் பாட்டியா, சி.ஆர்.கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், செய்தி தொடர்பாளர்கள், தகவல் தொடர்பு ஊடகங்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

          

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: விஜய்யுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேட்கிறீர்கள். உண்மையைச் சொல்லப்போனால், உங்களுக்குத் தெரிந்த விவரம் கூட எனக்குத் தெரியாது. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்.

அவர்களின் மூலதனமே பொய்தான். நான் இங்கே நாட்டு மக்களுக்காகப் பேச வந்திருக்கிறேன். நாட்டு மக்களுக்கு என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்ல வந்திருக்கிறேன். ஆனால், உங்களுக்கு இருக்கும் ஒரே கவலை கூட்டணி அமைகிறதா இல்லையா என்பது மட்டும்தான்.

விஜய் எங்கள் கூட்டணிக்கு வருவது குறித்து இப்போது நான் கருத்துச் சொல்ல முடியாது. கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அவர் டெல்லி செல்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். அப்படியிருக்கையில், அவரது டெல்லி பயணத்தையும் கூட்டணியையும் இணைத்து முடிச்சுப் போடுவது எந்த வகையில் நியாயமாகும்?

விஜய்யின் டெல்லி பயணத்துக்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. உலகம் முழுவதும் போர் நடக்கிறது. இந்தியாவில் மட்டும் எந்த போரும் இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் ஒரே அக்கப்போராக இருக்கிறது.

போர் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் சவால்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், மத்திய அரசு சாமானிய மக்களுக்குத் தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்வளவு பேசும் திமுக, சிலிண்டருக்கு ரூ.100 குறைப்போம் என்றார்களே, குறைத்தார்களா? பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.5-ம் குறைப்போம் என்றார்களே குறைத்தார்களா? காவிரி குண்டாறு இணைப்போம் என்றார்களே இணைத்தார்களா? வாக்குறுதியில் சொல்லியதை எதையாவது நிறைவேற்றினார்களா?

இவற்றைச் செய்யாமல், உலகளாவிய போர்ச் சூழலால் ஏற்படும் சில நெருக்கடிகளை மட்டும் பெரிதுபடுத்தி அரசியல் செய்வது நியாயமா?

தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கூட்டம் இருப்பது போல ஒரு பிம்பத்தை திமுக கட்டமைக்கிறது. கையில் பண பலமும், அரசு அதிகாரமும் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள்.

திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகத் திருமாவளவன் எதை வைத்துச் சொல்கிறார்? எண்ணிக்கையை வைத்தா? அல்லது வெறும் எண்ணத்தை வைத்தா? அரசியலில் மக்களின் எண்ணம் தான் முக்கியம். கருணாநிதி இருக்கும் போதே அவர்கள் கூட்டணியில் நிறைய கட்சிகளை சேர்த்தார்கள்.

ஆனால், வெற்றி பெற்றார்களா? இல்லை. எனவே, கூட்டணி என்பது முக்கியமல்ல. ஆட்சியில் இருக்கும் போது, மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பது தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT