நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

 
தமிழகம்

திமுக கூட்டணிக் கட்சிகளின் சீட்டை மக்களும் குறைப்பார்கள்: நயினார் நாகேந்திரன் கருத்து

செய்திப்பிரிவு

“திமுக கூட்டணி கட்சிகளின் சீட்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்கிறார்கள். திமுக கூட்டணி கட்சிகளுக்கான சீட்டை மக்களும் குறைப்பார்கள்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பின்னர் அறிவிப்போம். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் உள்ளது.

அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. அமலாக்கத் துறை வருமானத் துறை என்பவை எல்லாம் சுதந்திரமான அமைப்புகள்.

          

அமலாக்கத் துறை வழக்கில் சிக்கியவர்கள் மீதுதான் விசாரணை நடத்தப்படும். புதிதாக வழக்குப் பதிவு செய்தால் அமலாக்க துறையை வைத்து நாங்கள் மிரட்டுவதாகச் சொல்லலாம். தற்போது அமலாக்கத் துறை விசாரணையில் இருக்கும் அனைவர் மீதும் கடந்த தேர்தலுக்கு முன்பிருந்தே வழக்கு உள்ளது. விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே அவர் மீதும் திமுக அமைச்சர்கள் மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை வழக்குகள் உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மீது வழக்கு இருக்கும் சூழலில் இப்போது அதை வைத்து மிரட்டுவதாகச் சொன்னால் சரியானதாக இருக்குமா? தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் சொல்கிறேன், நீங்கள் குறிப்பிடும் யாருடனும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. விஜய் கட்சியில் இருந்தும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் பிம்பம் கம்பம் என்பதெல்லாம் தேவையில்லாதது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

80 தொகுதிகளும் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பொறுப்பும் தருவதாக விஜய்க்கு ஆஃபர் வந்ததாக ஆதவ் சொல்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே தெரியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோடி கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் பகுதிக்கு வர உள்ளார். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக-வின் தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களும் ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் போன்றோரும் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரவுள்ளனர். திமுக கூட்டணிகட்சிகளின் சீட்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்கிறார்கள். திமுக கூட்டணி கட்சிகளுக்கான சீட்டை மக்களும் குறைப்பார்கள்.

பாஜக சாதி சார்ந்தோ மதம் சார்ந்தோ உள்ள கட்சி கிடையாது. மதம் சார்ந்த கட்சி என்றால் அது திமுக தான். அதனை எங்களால் பகிரங்கமாகச் சொல்ல முடியும். இந்துக்களின் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம் என முதலமைச்சர் வெளிப்படையாகவே சொல்லி உள்ளார். பாஜக அப்படியல்ல. இஸ்லாமிய அமைப்புகளாக இருந்தாலும் நேரடியாக அவர்கள் நிகழ்வில் பங்கேற்று கொள்கிறோம். கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நிகழ்வில் பங்கேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT