நயினார் நாகேந்திரன் | ராஜ்மோகன்
சென்னை: “அரசுப் பள்ளியில் அதிகாரத் தொனியில் ஆய்வு நடத்திய அமைச்சர் கீர்த்தனாவுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வக்காலத்து வாங்குவதா?” தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அமைச்சருக்கு அப்புறம் ஆதரவுக் கரம் நீட்டலாம்... முதலில் அரசுப்பள்ளிகளைக் கவனியுங்கள் அமைச்சர் ராஜ்மோகன்.
வகுப்புகள் துவங்கி ஒரு மாதம் கடந்த பிறகும் கூட, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான 4, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களும், இடைநிலை மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகளும், 1 முதல் 3-ஆம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கையேடுகளும் இன்னும் முறையாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் கல்வி வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளன.
கோடைக்காலம் முடிந்து சரியாக பள்ளிகள் திறக்கப்படும் வேளையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நீங்கள், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இருக்கின்றனரா, பாடப் புத்தகங்கள் முழுவதுமாக பிள்ளைகளுக்கு கிடைக்கப் பெற்றனவா, பள்ளிகளில் தரமான வகுப்பறைகள், சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளனவா என்பதைத் தானே முதலில் ஆய்வு செய்து உறுதிபடுத்தியிருக்க வேண்டும்?
ஆனால், நீங்களோ அரசுப் பள்ளி மாணவிக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை அதிகாரத் தொனியில் குத்திக் காட்டிய அமைச்சர் கீர்த்தனாவின் ‘சோ கால்டு’ ஆய்வு சரிதான் என்று கூறி வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆகச் சிறந்த கல்வித் துறை உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் செயல்பாடுகளை மட்டுமே சார்ந்துள்ளது. எனவே, உங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுங்கள் அமைச்சர் ராஜ்மோகன். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியையும், பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.