

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
புது டெல்லி: “விபி ஜி ராம் ஜி திட்டம் வேலைவாய்ப்பு உரிமைகளை பறிக்கும் திட்டம் ஆகும். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரமளித்த வேலைவாய்ப்புக்கான அரசியலமைப்பு உரிமையை பறித்துவிட்டு, மாநில அரசுகள் மீது தாங்க முடியாத நிதிச் சுமையை இந்த திட்டம் சுமத்துகிறது” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
விபி ஜி ராம் ஜி சட்டத்தை விமர்சித்து, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் நிதியமைச்சர் ஹசீப் திராபு எழுதிய கட்டுரை ஒன்றை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துகொண்டார். அவரின் எக்ஸ் பதிவில், "இந்தியாவின் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரும், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் நிதியமைச்சருமான ஹசீப் திராபு, புரட்சிகரமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு மாற்றாக அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்ட விபி ஜி ராம் ஜி திட்டத்தின் யதார்த்தங்களை வெளிப்படுத்தும் வகையில் மிகத் தெளிவான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
விபி ஜி ராம் ஜி திட்டம் என்பது உண்மையில் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் திட்டமாகும். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரமளித்த வேலைவாய்ப்புக்கான அரசியலமைப்பு உரிமையை பறித்துவிட்டு, மாநில அரசுகள் மீது தாங்க முடியாத நிதிச் சுமையை சுமத்தும் ஒரு திட்டமாக இது மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம், மக்களை இந்தத் திட்டத்திலிருந்து விலக்கி வைப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தைப் போல இது ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டம் அல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 1-ம் தேதி முதல் விபி ஜி ராம் ஜி சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், புதிய சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் நியாயமற்ற வகையில் குறைவாக இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, வலுப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டுவருமாறு வலியுறுத்தி வருகிறது.