சென்னை: ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தி தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் ரயில்வே திட்டங்கள், தமிழக ரயில்வே துறைக்கு மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய நிதி உள்ளிட்டவை தொடர்பாக திமுக எம்.பி. திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்தின் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 8 மடங்கு அதிக நிதி, மொத்தம் 19 புதிய ரயில் திட்டங்கள், கிட்டத்தட்ட 500 கிமீ வரையிலான புதிய ரயில் பாதைகள் உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் தற்போதைய என்டிஏ ஆட்சியில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒருமுறை எடுத்துக் கூறியுள்ளது மத்திய அரசு.
அதுமட்டுமின்றி புதிய திட்டங்களுக்கு மொத்தம் 4,612 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், முந்தைய திமுக அரசு அதில் வெறும் 26 சதவீதம், அதாவது 1,178 ஹெக்டேர் நிலங்களை மட்டுமே கையகப்படுத்திக் கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது மத்திய அரசு.
எனவே, முந்தைய அரசைப்போல கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், ரயில்வே திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி, தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு துணை நிற்குமாறு முதல்வர் விஜய்யை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.