சென்னை: கம்யூனிஸ்ட்கள் ஆதரவை வாபஸ் பெற்றால், தவெக அமைச்சரவையே இருக்காது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
சென்னை பாடியில் செய்தியாளர்களிடம் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், மூத்த தலைவருமான இரா.முத்தரசன் கூறியதாவது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எங்கள் மீது ஏன் திடீரென கோபம் வந்தது என்று தெரியவில்லை. சட்டப்பேரவையிலும் சரி, சட்டப்பேரவைக்கு வெளியிலும் சரி முதல்வர் விஜய்யும், தவெக அமைச்சர்களும் பிரச்சினைகளை திசை திருப்புகின்றனர்.
சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பினால், அதற்கு முதல்வரும், அமைச்சர்களும் பதிலளிக்க வேண்டும். அதற்கு மாறாக திசை திருப்பி பேசுவதால் எந்த பயனும் ஏற்படாது. இவ்வாறு பிரச்சினைகளை திசை திருப்புவதால், எந்த பிரச்சினையும் தீர்ந்துவிடாது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறும் இடதுசாரி கட்சிகளின் தயவால் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தவெக ஆட்சிக்கு அளித்திருக்கும் ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டால், அமைச்சரவையே இருக்காது. இதற்காக தான் ஆளுநரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். எப்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்கள் வாபஸ் வாங்குதாக அறிவிப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார். எனவே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதை உணர்ந்து பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.