சென்னை: புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக, அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். அதில் 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ், திமுக கூட்டணியை முறித்து கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்தது.
மேலும் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தலா 2 எம்எல்ஏக்களை கொண்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்தன. இதன்மூலம் தவெகவின் பலம் 120-ஆக உயர்ந்தது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்ததால் கடந்த 10-ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா நியமிக்கப்பட்டார். பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் உட்பட 233 எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
2-வது நாளான நேற்று சட்டப்பேரவையின் நிரந்தர தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தவெக சார்பில் பேரவைத் தலைவர் பதவிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவான ஜேசிடி பிரபாகரும், துணைத்தலைவர் பதவிக்கு துறையூர் தொகுதி எம்எல்ஏவான ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வாகி பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் மே 13-ம் தேதிக்குள் (இன்று) நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். அதன்படி தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இதற்கிடையே, இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய், ராஜினாமா செய்துவிட்டார். மேலும், திருப்பத்தூரில் ஒரு ஓட்டில் வென்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வாக்கெடுப்பில் பங்கேற்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் தவெக வெற்றிபெற்ற 108 தொகுதிகளில் கையில் 106 எம்எல்ஏக்கள் தான் இருக்கின்றனர். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரசிடம் 5, விசிக, இந்திய கம்யூ. மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளிடம் தலா 2 வீதமாக 8 இடங்கள் என மொத்தம் 119 இடங்கள் உள்ளன. இதன்மூலமே தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைத்து விட்டன.
இதுதவிர தவெகவுடன் கூட்டணி அமைத்து, பெரும்பான்மையை நிருபிப்பதில் விஜய்க்கு, அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒருதரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். அந்த அணியில் சுமார் 30 எம்எல்ஏக்கள் வரை உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், அமமுகவின் எம்எல்ஏ காமராஜ், தவெகவை ஆதரிப்பதாக சட்டப்பேரவையில் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். தவெகவுக்கு ஆதரவு பலம் 150 வரை இருப்பதால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைப்பதில் விஜய்க்கு சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக புறக்கணிப்பு? - ஆட்சியை தக்க வைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலம் தவெகவுக்கு இருப்பதால் வாக்கெடுப்பை புறக்கணிக்க திமுக, அதிமுகவில் இபிஎஸ் தரப்பு, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.