தமிழகம்

இசை பல்கலைக்​கழக மானியம் ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு டாக்​டர் ஜெ.ஜெயலலிதா இசை பல்​கலைக்​கழகத்​துக்​கான மானிய நிதி ரூ.3 கோடி​யில் இருந்து ரூ.5 கோடி​யாக உயர்த்தி வழங்​கப்​படும். இசை, கவின் கலை பயிலும் மாணவர்​களுக்​கும் ‘நான் முதல்​வன்’ திறன் சார்ந்த படிப்​பு​கள் விரிவுபடுத்​தப்​படும் என்று பட்​டமளிப்பு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார்.

தமிழ்​நாடு டாக்​டர் ஜெ.ஜெயலலிதா இசை, கவின்​கலை பல்​கலைக்​கழகத்​தின் 3-வது பட்​டமளிப்பு விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. பல்​கலைக்​கழக வேந்​தரும், தமிழக முதல்​வரு​மான ஸ்டா​லின் தலைமை வகித்​தார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது:

ஜெயலலி​தா​வின் பெயர் சூட்​டப்​பட்ட தமிழ்​நாடு இசை பல்​கலைக்​கழகத்​துக்கு நாங்​கள் எந்த பாகு​பாடும் காட்​ட​வில்​லை. பட்​டமளிப்பு விழாவை புறக்​கணிக்க​வில்​லை. மாறாக, 2021-க்கு பிறகு, பல்​கலைக்​கழகத்தை மேலும் செழு​மை​யாக வளர்த்​திருக்​கிறோம். இது​தான் நான் நிறுவ நினைக்​கும் அரசி​யல் மாண்​பு. இது இனி எப்​போதும் தொடர வேண்​டும்.

கலைகள், கலைஞர்​களை மதித்​துப் போற்​று​வது தமிழ் மண். அது ஒரு நல்ல அரசின் கடமை​யும்​ கூட. இது பட்​டமளிப்பு விழா என்றாலும், கலை வளர்க்​கும் அரசின் சார்​பில் 4 புதிய அறி​விப்​பு​களை வெளி​யிடு​கிறேன். தமிழகத்​தின் மரபுக் கலைகளான கிராமிய, நாட்​டுப்​புறக் கலைகளை வளர்க்​கும் வகை​யில், மதுரை மாவட்​டம் திருப்​பரங்​குன்​றம் வட்​டம் வலை​யங்​குளத்​தில் கிராமிய கலைப் பயிற்​சிப் பள்ளி அமைக்க அரசு சார்​பில் நிலம் ஒதுக்​கப்​படும்.

இசை பல்​கலைக்​கழகத்​தில் கவின்​கலை​யில் புதி​தாக கலை பாது​காப்​புப் பிரி​வில் முதுகலை பட்​டப்​படிப்பு 2026-27-ம் கல்வி ஆண்​டில் அறி​முகம் செய்​யப்​படும். இசை பல்​கலைக்​கழகத்​துக்​கான மானிய நிதி ரூ.3 கோடி​யில் இருந்து ரூ.5 கோடி​யாக உயர்த்தி வழங்​கப்​படும். இசை, கவின் கலை பயிலும் மாணவர்​கள் பயனடை​யும் வகை​யில் ‘நான் முதல்​வன்’ திறன் சார்ந்த படிப்​பு​கள் விரிவுபடுத்​தப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக, கலைத் துறை​யில் ஆற்​றிய சிறப்​பான பங்​களிப்பை பாராட்டி அரசு கவின்​கலை கல்​லூரி முன்​னாள் முதல்​வரும், மூத்த ஓவியரு​மான சந்​துரு, நடிகர் சிவகு​மார் ஆகியோ​ருக்கு கவுரவ டாக்​டர் பட்​டத்தை முதல்வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். பின்னர் அவர்கள் தமது ஏற்​புரை​யில் பேசிய​தாவது:

நடிகர் சிவக்கு​மார்: எஸ்​எஸ்​எல்சி தேர்ச்சி பெறாத கருணாநி​தி, சங்க இலக்​கி​யத்​துக்கு கற்பனைக்கு எட்​டாத வகை​யில் உரை எழு​தி​யுள்​ளார். முதல்​வர் ஸ்டா​லின் தனது தந்​தை​ போலவே சிறப்​பாக ஆட்சி நடத்​துகிறார். கடந்த 2018-ல் கருணாநிதி

மறைந்​த​போது கோவை​யில் நடந்த இரங்​கல் கூட்​டத்​தில் ‘நீங்​களும் முதல்​வ​ராக வரு​வீர்​கள்’ என்​றேன் எனது வாக்குபலித்​து, 2021-ல் ஸ்டா​லின் முதல்வர் ஆனார். காலை உணவு, தமிழ்ப் புதல்​வன், புது​மைப்​பெண், வீடு தேடி மருத்து​வம் என எண்​ணற்ற திட்​டங்​களை செயல்​படுத்தி திறம்பட ஆட்சி செய்து வரும் ஸ்டா​லின் மீண்​டும் முதல்​வர் பொறுப்​பில் நீடிக்க வேண்​டும்.

ஓவியர் சந்​துரு: தமிழகத்​தில்தான் இலக்​கியக் காட்​சிகள், படைப்​பாளி​களுக்​கும் நினை​வுச் சிற்​பங்​கள் வடிக்​கப்​படு​கின்​றன. சங்க இலக்​கியக் காட்​சிகளை​யும் சிற்​பங்​களாக காணலாம். இதற்​

கெல்​லாம் காரணம் முன்​னாள் முதல்​வர் கருணாநி​திதான். இவ்​வாறு அவர்​கள் பேசினர். கருணாநி​தி​யின் திரைப்பட வசனங்​களை சிவக்கு​மார் நீண்ட நேரம் மூச்​சு​வி​டா​மல் உணர்ச்சி பொங்க பேசி​ய​போது முதல்​வர் உட்பட அனை​வரும் கைதட்டி பாராட்​டினர். 1,846 பேருக்கு பட்​டம்: விழா​வில், மேலும் 10 பேர்: முதல்​வரிடம் இருந்து பிஎச்டி பட்​டத்தை பெற்​றுக் கொண்​டனர். தொடர்ந்​து, மாணவ, மாணவி​களுக்கு பல்​கலைக்​கழக இணை வேந்​தரும், தமிழ் வளர்ச்​சி, செய்​தித் துறை அமைச்​சரு​மான மு.பெ.​சாமி​நாதன் பட்​டங்​களை வழங்​கி​னார். இசை, கலை தொடர்​பான பல்​வேறு படிப்​பு​களில் 1,846 பேர் பட்​டம் பெற்றனர்.

துணைவேந்​தர் சி.சவுமியா வரவேற்று ஆண்​டறிக்கை வாசித்​தார். கலை பண்​பாட்​டுத் துறை செயலர் க.மணி​வாசன், இயக்​குநர் எஸ்​.வளர்​ம​தி, பல்​கலைக்​கழக பதி​வாளர் பூமாலினி, தேர்வுக் கட்​டுப்​பாட்​டு அலு​வலர்​ முத்​துக்​கு​மார்​, பேராசிரியர்​கள்​, மாணவ, மாணவி​கள்​, பெற்​றோர் கலந்​து கொண்​டனர்​.

SCROLL FOR NEXT