முனிர் ஹோடா.
சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி யும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல் மேலாண் இயக்குநருமான முனிர் ஹோடா காலமானார். அவருக்கு வயது 76.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்த முனிர் ஹோடா, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்து, 1976-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தார்.
தமிழக அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாட்டு நரம்புத் தளர்ச்சி நோயால் (ALS) பாதிக்கப்பட்டிருந்தார்.
அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு பர்வீன் என்ற மனைவி, சமீர் என்ற மகன், தபசும் என்ற மகள் உள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள முனிர் ஹோடா இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக உள்துறைச் செயலர், டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், மாநிலத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, நீண்ட காலம் அரசுப் பணியாற்றியவர்.
கருணாநிதியின் முதன்மைச் செயலராகப் பணியாற்றியவர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல் மேலாண் இயக்குநராக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. நிர்வாகத் துறையில் பல ஆண்டுகால அனுபவம் கொண்டவர்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.முனிர் ஹோடா.