சென்னை: புழல், சூரப்பட்டில் ரூ.701.62 கோடியில் நடைபெற்று வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய சீரமைப்பு, கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.
வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக புழல் ஏரி உள்ளது. இதன் அருகில் உள்ள 300 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டில் உள்ளது.
இதில் பெரும்பாலான கட்டமைப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதை 310 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலையமாக மேம்படுத்தும் பணி ரூ.555 கோடியில் நடந்து வருகிறது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து ரூ.146.62 கோடியில் சூரப்பட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள 47 மில்லியன்லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த 2 பணிகளையும் நிர்ணயித்த கால அளவுக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ககன்தீப் சிங்பேடி அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், செயல் இயக்குநர் என்.ஓ.சுகபுத்ரா, பொறியியல் இயக்குநர் உ.பர்வீஸ், தலைமைப் பொறியாளர் கே.உமா, மேற்பார்வை பொறியாளர் கே.கலைச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணி முடிவடையும்போது, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட சுமார் 23 லட்சம் பேரும், சூரப்பட்டு சுத்திகரிப்பு நிலையப் பணி நிறைவேற்றப்படுவதன் மூலம் அம்பத்தூர் மண்டலம், ஆவடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சுமார் 3.50 லட்சம் பேரும் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.