சென்னை: ‘கிராமப்புறங்களிலும் மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கும் வகையில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்’ என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தாம்பரம் வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “ஏழை, எளிய கிராமப்புற பெண்களும் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் நாப்கின்களை மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், கிராமப்புற பெண்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும், பள்ளி மாணவியர் மற்றும் பிரசவித்த இளம் தாய்மார்களுக்கு இலவசமாகவும் நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பெரும்பாலான பெண்கள் பயன் அடைந்து வருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு முந்தைய தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 1000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் மானிய விலையில் நாப்கின்கள் விற்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கும் வகையில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.
அதையடுத்து, இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்.29-க்கு தள்ளிவைத்துள்ளனர். அன்றைய தினம், கூடுதலாக தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள் குறித்த விவரங்களை அரசு தெரிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.